×

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 12வது நாளாக தொடரும் போராட்டத்தில் இயக்குனர் கவுதமன் பங்கேற்பு

திருவாரூர்: திருகாரவசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 12வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திரைப்பட இயக்குனர் நேரில் கவுதமன் ஆதரவு தெரிவித்துள்ளார். சுமார் 500கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. திருக்காரவாசல் பகுதியில் இருந்து நாகை மாவட்டம் கரியப்பட்டி பகுதி வரை சுமார் 494 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட இயக்குனர் கவுதமனும் போராட்டத்தில் பங்கேற்றார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனத்திற்கு எப்படி டெண்டர் வழங்கியது? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாடு அரசுக்கு தெரிந்து டெண்டர் விடப்பட்டதா?, இல்லையா? என்பதை உடனடியாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என கூறினார். மேலும் வாழ்விடத்தை அழித்து, மண்ணின் தரத்தை சீர்குலைக்கும் இத்திட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு தர மாட்டோம் என தெரிவித்தார்.  விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும், அதை போராக எதிர்கொள்வோம் என தெரிவித்தார். மக்கள் அனுமதியில்லாமல் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gowthaman ,Thiruvarur ,struggle , Tiruvarur, Hydro Carbon Project, Struggle, Director Gauthamman
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு