×

செல்போன் திருட்டை கண்டுபிடிக்க சென்னை மாநகர காவல் துறையில் டிஜிகாப் செயலி அறிமுகம்: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நடிகர் விஜய்சேதுபதி தொடங்கி வைத்தனர்

சென்னை: செல்போன்  திருட்டு குறித்து புகார் அளிக்க சென்னை மாநகர காவல் துறை சார்பில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறும்படம் மற்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றிய குறுந்தகடு ஒன்றும் வெளியிடப்பட்டது. பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், ‘‘இந்த செயலி மூலம் உபயோகித்த போனை இரண்டாவது முறையாக வாங்கும் போது, திருடிய மொபைல் தானா என கண்டுபிடிக்கவும், மொபைல் போன் காணாமல் போனால் புகார் அளிக்கவும், அதேபோல், பழைய பைக் வாங்கும் போது அந்த பைக்கில் ஆவணங்களை இந்த செயலில் ஏற்றினால் அது திருட்டு பைக்கா என்று கண்டுபிடிக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.

 காவல் நிலையங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என்கிற திட்டம் வெற்றி அடைந்துள்ளது’’ என்றார்.நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ‘‘காவல் துறைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை இந்த செயலி குறைக்கும். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பார்த்தாலே எனக்கு அச்சமாக இருக்கும். தற்போது அந்த வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அழகாக்கி உள்ளது. காவல் துறை பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அச்சம் குறையும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Introduction ,Police Metropolitan Inspectorate ,Vijay Sethupathi ,Chennai Metropolitan Police Commissioner ,AK Vishwanathan , Introduction , Police Metropolitan Inspectorate,Chennai Metropolitan ,Police Commissioner AK Vishwanathan ,actor Vijay Sethupathi
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்