லண்டன் சொத்து பணமோசடி வழக்கு : அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராபர்ட் வதேரா

டெல்லி: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியைச்  சேர்ந்த சஞ்சய் பண்டாரியின் “ஆப்செட் இண்டியா சொலுயூஷன்ஸ்” (ஒ.ஐ.எஸ்) என்ற  ஆயுத விற்பனை நிறுவனத்தின் இ-மெயில்களை ஆய்வு செய்தபோது, காங்கிரஸ் தலைவர்  சோனியாவின் மருமகனான ராபர்ட் வதேரா, சஞ்சய் பண்டாரி மூலம், லண்டன்  பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 138 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை  கடந்த 2009ம் ஆண்டு ராகுல் மற்றும் தனது பெயரில் வாங்கி இருப்பது  தெரியவந்தது. பிறகு சில மாற்றங்கள் செய்யப்பட்ட அந்த பங்களாவை  ராபர்ட் வதேரா 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக விலைக்கு விற்பனை  செய்துள்ளார். இதனால் பண்டாரி மூலம் இதுபோன்ற வேறு ஏதேனும் மோசடிகளில்  ராபர்ட் வதேரா ஈடுபட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறையினரும், அமலாக்கத்  துறை அதிகாரிகளும் சந்தேகித்தனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை வதேரா, அவரது  நெருங்கிய நண்பர் மனோஜ் அரோரா  மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகிறது. இதனிடையே அரோரா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக  அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 19ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில்  தெரிவித்தனர். இந்த வழக்கு நேற்று சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார்  முன்பு விசாரணைக்கு வந்தபோது, வதேரா தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்கக்  கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் டி.பி.சிங் மற்றும் வழக்கறிஞர் நிதேஷ் ராணா, “கடந்த 2009ம் ஆண்டு பெட்ரோலிய ஒப்பந்த வழக்கிலும் வதேரா மீது குற்றச்சாட்டு இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது” என வாதிட்டனர்.

மேலும், “லண்டனில் வதேராவுக்கு இதுபோன்று ரூ.36 கோடி, ரூ.29 கோடியில் இரண்டு வீடுகள், 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. எனவே அவர் நேரில் ஆஜராகி இந்த சொத்துகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்” என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்ஷி, வதேரா தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்ததாகவும் இனிமேல் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராவார் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த  உத்தரவில், ‘‘வரும் 6ம் தேதி அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு ஆஜரான கணவர் ராபர்ட் வதேராவுடன் பிரியங்கா காந்தியும் சென்றுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராபர்ட் வதேராவின் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத் துறை மனு