×

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 : நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

வெலிங்டன்: இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று புதிய வரலாறு படைத்தது. நியூசி. மண்ணில் விளையாடிய இருதரப்பு தொடரில் இந்திய அணி 4 வெற்றிகளைப் பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும். அடுத்து இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்கியது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நல்ல துவக்கம் கொடுத்தனர். 8.2 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்தனர்.  முன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள்  முடிவில் நியூஸிலாந்து அணி  6 விக்கெட்களை இழந்து 219 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார் , கலீல் அஹமது ,க்ருனால்  பாண்டியா , சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஆனால் இந்திய அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறி கொடுத்தது. கடினமான ஸ்கோரை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. 2.2 ஓவரில் கேப்டன் ரோகித் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து தவான் 18 பந்துகளில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பந்த் 10பந்துகளில் 4 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  அவரை தொடர்ந்து விஜய் சங்கர் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 5 ரன்களிலும் , ஹர்டிக் பாண்டியா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தோனி 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது. இதனையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவை 80 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக  வென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand ,India , First T20, New Zealand, Win, India defeat
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா