×

ரூ.20 ஆயிரம் மாமூல் தர மறுத்ததால் டிபன் கடையை சூறையாடிய அதிமுக நிர்வாகி

* தினமும் ரூ.200 வசூலித்ததும் அம்பலம்
* போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

சென்னை:சென்னை தரமணியை சேர்ந்தவர் செல்லதுரை (38). இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் டிபன் கடை தொடங்கினார். இந்த கடை நடத்த அனுமதிக்க அந்த பகுதி அதிமுக வட்ட அவை தலைவர் ஏமநாதன் என்பவர் செல்லதுரையிடம் ரூ.15 ஆயிரம்  மாமூல் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, தினமும் ரூ.200 வசூலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு வேண்டியவருக்கு அந்த டிபன் கடையை வழங்க ஏமநாதன் முடிவு செய்தார்.  இதையடுத்து,  செல்லதுரையிடம், ‘எனக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் நீ இங்கு தொடர்ந்து கடை நடத்தலாம். இல்லையென்றால், கடையை காலி செய்ய வேண்டும்’’ என்று கடந்த ஒரு வாரமாக கூறி வந்துள்ளார். அதற்கு, ‘‘இந்த டிபன் கடையில் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். திடீரென அவ்வளவு தொகைக்கு நான் எங்கு செல்வேன்,’’ என செல்லதுரை கூறி வந்துள்ளார்.  

ஆனால், இதை ஏற்காத அதிமுக நிர்வாகி ஏமநாதன் நேற்று முன்தினம் இரவு தனது ஆதரவாளர்களுடன் வந்து செல்லதுரையின் கடையை அடித்து நொறுக்கி பொருட்களை சாலையில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து செல்லதுரை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தரமணி பகுதியில் சாலையோரம் நடத்தப்படும் கடைகள் அனைத்தையும் அதிமுக நிர்வாகி ஏமநாதன்  தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், கடைக்காரர்களிடம் தினசரி ரூ.200 மாமூல் வாங்கி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதிமுக நிர்வாகி ஏமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் தரமணியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : administrator ,AIADMK ,shop ,Tipan ,Rs , Tiff Shop, AIADMK administrator
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயகுமாரின்...