×

கும்கிக்கு வழங்கும் உணவை சாப்பிடுகிறது 5 நாளாகியும் காட்டுக்குள் செல்லாத சின்னதம்பி: வனத்துறையினர் திணறல்

உடுமலை: உடுமலை கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை, கும்கி யானையுடன் கொஞ்சியபடி அதற்கு தரப்படும் உணவை சாப்பிடுகிறது.  5 நாளாகியும் அதை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.  கோவை சின்னதடாகத்தில் பிடிபட்ட சின்னதம்பி யானை,  டாப்சிலிப்பை அடுத்த வரகளியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய இந்த யானை பொள்ளாச்சி, கோட்டூர், உடுமலை பகுதியில் சுற்றி  திரிந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக உடுமலை கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலைபகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து  வருகின்றனர். இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டையில் படுப்பது, அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று கரும்பு,  வாழைகளை சாப்பிடுவது. இரவில் கும்கியுடன் விளையாடுவது, மீண்டும் குட்டைக்கு சென்று படுப்பது, வன ஊழியர்கள் சாப்பாட்டு பாக்ஸ்களை கீழே தள்ளி  விட்டு வீட்டு சாப்பாட்டை ருசிப்பது,

கும்கி யானைகளுக்கு வழங்க தயார் செய்யப்படும் களியை சாப்பிடுவது, கும்கி கலீமுடன் கொஞ்சி விளையாடுவது என சின்னதம்பியின் அன்றாட செயல்கள்  உள்ளன.   அது படுத்திருக்கும் கழிவுநீர் குட்டையில் இருந்து ரசாயன தண்ணீரை வனத்துறையினர் வெளியேற்றினர். மேலும் இங்கிருந்த முட்புதர்களையும்  அகற்றினர். இருந்த போதிலும் வனத்திற்குள் செல்லாமல் அடம்பிடித்தபடி சின்னதம்பி அங்கேயே தங்கி, சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள 25 ஏக்கர் நிலத்தில்  சுற்றி வருகிறது. இதனால் அதை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கும்கியாக மாற்றுவதற்கு தடை கோரி ஐகோர்ட்டில்  வழக்கு உள்ளதால் எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. இதனை தொடர்ந்து கோவை, பொள்ளாச்சி, பழனியில் இருந்து வந்த வனத்துறை ஊழியர்கள் திருப்பி  அனுப்பப்பட்டனர். தற்போது உடுமலை, அமராவதி வன ஊழியர்கள் மட்டும் யானையை கண்காணித்து வருகின்றனர்.

வெளியேற மறுப்பது ஏன்?: யானைகள் ஆய்வாளர் பேட்டி:
தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் ஸ்ரீவத்சவா யானை சின்னதம்பியை நேரில் ஆய்வு செய்து அதன் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.  இதையடுத்து ஆசிய யானைகள் ஆய்வாளரும், ஆசிய யானைகளின் பாதுகாப்பு குழு உறுப்பினருமான அஜய்தேசாய், கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு  சர்க்கரை ஆலை பின்புறம் முகாமிட்டுள்ள சின்னத்தம்பியை நேற்று நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து அஜய் தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது: சின்னதம்பி  யானை  சாதுவாக இருக்கிறது. இந்த யானைக்கு தேவையான உணவும், தண்ணீரும் இந்த பகுதியில் கிடைத்து வருவதால், இப்பகுதியை விட்டு வெளியேற  மறுக்கிறது. மேலும் கும்கி யானைகளுடன் நன்றாக பழகுவதாகவும், பாகன்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னதம்பி யானையால்  பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இது குறித்து அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பேன். இவ்வாறு அஜய்தேசாய் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathambi Elephant, Kumki Elephant, Kumki, Kodu, Chinnathambi, Forest
× RELATED வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்