×

ஊத்தங்கரை அருகே வறண்டு கிடக்கும் பாம்பாறு அணை : குட்டைபோல் தேங்கிய நீரில் மீன்பிடிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாரூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், கால்வாய் மூலமாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு செல்கிறது. இந்த ஏரி நிரம்பி, அங்கிருந்து மற்றொரு கால்வாய் மூலம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையை சென்றடைகிறது. கடந்த 1983ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாம்பாறு அணையின் மூலம் ஊத்தங்கரை தாலுகாவில் மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றாம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை உள்பட 12 கிராமங்களில், 2,501 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும் குறிப்பாக ஊத்தங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்கள், சிங்காரப்பேட்டையில் உள்ள கிராமங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. நடப்பு ஆண்டில் போதிய மழையில்லாததால், அணையில் உள்ள தண்ணீர் வற்றி வருகிறது. பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு வரும் கால்வாய் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.  இதுதொடர்பாக பாம்பாறு அணை பாதுகாப்பு விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், ஊத்தங்கரை தாலுகாவில் மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

பாம்பாறு அணையில் தண்ணீர் வறண்டு, நீர்வரத்து பாதை குட்டைபோல் மாறியுள்ளது. எதிர்வரும் கோடை காலத்தில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பாம்பாறு அணைக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பட்ஜெட்டில் கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும், என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bamboor Dam ,Uthangarai , Uthangarai, Bombayar dam, farmers
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது