×

சிபிஐ இயக்குனர் தேர்வில் ரிஷிகுமாரை எதிர்த்தது ஏன்? ஜெட்லிக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் தேர்வு விவகாரத்தில் நடைமுறையை அலட்சியம் செய்ததற்குத்தான் தான் எதிர்ப்பு தெரிவித்ததாக மக்களவை காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அமைச்சர் அருண்ெஜட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு  கூடியது. இந்த குழுவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இடம்பெற்றிருந்தார். கூட்டத்தில் மத்தியப் பிரதேச முன்னாள் டிஜிபி ரிஷிகுமார்  சுக்லாவின் பெயர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டது. ஆனால் ஊழல் வழக்குகளை கையாண்டதில் ரிஷிகுமாருக்கு அனுபவம் இல்லை என்பதால் அவரை தேர்வு  செய்வதற்கு மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரின் கருத்தை நிரகாரித்த தேர்வு குழு ரிஷிகுமார் சுக்லாவை சிபிஐ இயக்குனராக தேர்வு  செய்தது.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் சமூக வலைளத்தில் கருத்துக்கூறிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ‘‘புதிய சிபிஐ இயக்குனர்  நியமனத்திற்கு கார்கே மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்” என்று பதிவிட்டிருந்தார். அருண்ெஜட்லியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே 2 பக்க கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், ‘‘சிபிஐ தனது அதிகாரிகளை மாற்றியுள்ளது மற்றும் விசாரணைகளை நிறுத்தியுள்ளது. எனவே தான் சிபிஐ மற்றும் அதன் செயல்பாடுக்கு  எதிர்ப்பு தெரிவித்தேன். புதிய இயக்குனருக்கு இந்த துறையில் பணி அனுபவம் கிடையாது. எனவே அமைப்பு இழந்த நம்பிக்கையை அவரால் மீண்டும் கொண்டு  வர இயலாது. பிரதமர் அலுவலகம் மீதான மதிப்பு குறைந்துவிட்டது என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறேன். சிபிஐ இயக்குனர் தேர்வு நடைமுறையை  அலட்சியம் செய்ததற்கு தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதிகாரியின் நேர்மையை நான் குறைகூறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : directors ,CBI ,Garghee , CBI Director, Rishikumar, Arunjetli, Mallikarjuna Karke, Letter
× RELATED சென்னையில் தென்னிந்திய திரைப்பட,...