×

ரஞ்சி கோப்பை பைனல் விதர்பா 312 ரன் குவிப்பு: சவுராஷ்டிரா திணறல்

நாக்பூர்: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நாக்பூரில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்திருந்தது. வாசிம் ஜாபர் 23, மோகித் காலே  35, கணேஷ் சதீஷ் 32, அக்‌ஷய் வாத்கர் 45 ரன் எடுத்தனர். அக்‌ஷய் கர்னிவார் 21 ரன், அக்‌ஷய் வாக்கரே (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
வாக்கரே 34 ரன் எடுத்து சகாரியா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 13, குர்பானி 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்து ஆல்  அவுட்டானது (120.2 ஓவர்). சிறப்பாக விளையாடிய கர்னிவார் 73 ரன் (160 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சவுராஷ்டிரா பந்துவீச்சில் உனத்காட் 3, சகாரியா, மக்வானா தலா 2, பிரேரக் மன்கட், தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா  அணி, அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. தேசாய் 10 ரன், விஷ்வராஜ் ஜடேஜா 18 ரன்னில் வெளியேற, நட்சத்திர வீரர் செதேஷ்வர் புஜாரா 1 ரன்னில்  ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது.வாசவதா 13, ஷெல்டன் ஜாக்சன் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய தொடக்க வீரர் ஸ்னெல் பட்டேல் அரை சதம்  அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்துள்ளது. ஸ்னெல் பட்டேல் 87 ரன் (160 பந்து, 14 பவுண்டரி), மன்கட் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.  விதர்பா பந்துவீச்சில் சர்வதே 3, வாக்கரே 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranji Trophy ,Vidarbha 312 Run Away , Ranji,Trophy Final, Vidarbha 312, Run Away, Churachista stutter
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!