×

கைத்தறி அணிந்து எங்கள் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்: உதயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட வெங்கடேஸ்வரா கைத்தறி நெசவாளர் சங்க தலைவர்

சென்னை:  காஞ்சிபுரம் என்றாலே பேரறிஞர் அண்ணா காலத்தில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்கின்ற பகுதி என்று அறியப்பட்டது. அதில், பிள்ளையார்பாளையம் முழுக்க, முழுக்க நெசவாளர்கள் வாழ்கின்ற பகுதி. அந்த ஊரில் காலம்,காலமாக  நெசவு தொழிலில் ஈடுபட்டவர்களின் வாழ்வாதாரம் தற்போது, படுபாதாளத்திற்கு சென்று விட்டது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி இருந்தனர். தற்போது 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த  தொழிலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்த அளவுக்கு குறைந்தது பல்வேறு மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் இந்த தொழில் நலிந்து கிடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்  செயல்பட்டு வந்தது. தற்போது 15 கூட்டுறவு சங்கம் தான் நெசவாளர்களுக்கு நெசவு தொழிலில் ஈடுபட தேவையான உதவியை செய்கிறது. மற்ற கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நாங்கள் செய்யும் லுங்கி,  வேஷ்டி, சேலைகள் ஒரு காலத்தில் மக்கள் விரும்பி அணிந்தனர். தற்போது கால மாற்றம் காரணமாக நெசவாளர்களை வாழ வைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் மட்டுமே நெசவு துணிகளை வாங்கி  பயன்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் ஆர்டர் கொடுத்து அதற்கான ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவித்தனர். நெசவாளர்களுக்கு வாழ்வளித்து வந்த கோ ஆப்டெக்ஸில் தற்போது கொள்முதல் செய்வது குறைந்து விட்டது.  கோ ஆப்டெக்சில் 75 சதவீதம் கைத்தறி நெசவாளர்களின் துணிகளை ெகாள்முதல் செய்தனர். தற்போது, 25 சதவீதம் கூட கொள்முதல் செய்வதில்லை. ஏற்கனவே, கொள்முதல் செய்த துணிகளுக்கு உரிய கூலி  கிடைக்கவில்லை. மேலும், கைத்தறி துணிகள் தேக்க நிலையில் தான் உள்ளது. மொத்தத்தில், மத்திய அரசு நெசவாளர்களை ஊக்குவிக்காமல் நூல் வாங்க 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி, உற்பத்திக்கு 5 சதவீதம், விற்பனைக்கு 5  சதவீதம் என வரியை போட்டு எங்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழித்து கொண்டு வருகிறது. வாழ்வளிக்க வேண்டிய அரசுகள் எங்களது வாழ்வாதாரத்தை சீர்குலைக்கின்றனர். இதை நம்பியுள்ள ஏராளமான நெசவாளர்கள்  பல்வேறு தனியார் கம்பெனிகளுக்கு காவலர் பணியிடத்திற்கும், தனியார் கம்பெனி ஊழியர்கள் வேலைக்கு பெண்கள், ஆண்கள் செல்ல தொடங்கி விட்டனர்.

இதே நிலை தொடர்ந்தால், நெசவு தொழில் இந்த காலத்தோடு முடிந்து விடும் நிலை தான் உள்ளது. ஆகவே நெசவாளர் வாழ்வை மேம்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும். இந்த தொழிலில்  ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நல உதவிகள் செய்தால் மட்டுமே நெசவாளர்களை காப்பாற்ற முடியும். பெரும்பாலானோர் பவர்லூமுக்கு மாறிவிட்ட நிலையில்,  எங்களைப் போன்ற சிலர் இன்னமும்  கைத்தறி மூலமே லுங்கி, வேட்டி, சேலைகள் நெய்து வருகிறோம். இந்நிலையில் நாங்களும் கைத்தறித் தொழில் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் கைத்தறி மூலம் நெய்யும் துணி ரூ.450 விலை  உள்ள நிலையில் அதேபோன்று விசைத்தறியில் ரூ.300க்கு தருகின்றனர். இதனால் கைத்தறித் தொழில் நசிந்து வருகிறது. கைத்தறித் தொழிலை கைதூக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி கூட கைத்தறி ஆடைகளையே உடுத்தி, சுதந்திர போராட்ட காலத்தில் அனைவரும் கைத்தறித் துணிகளையே அணியவேண்டும் என்று வலியுறுத்தினார். அதையே பின்பற்றி பொதுமக்களும் கைத்தறி துணிகளை  பயன்படுத்த வேண்டும். அப்போது தான், கைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும். ஆனால் தற்போது கைத்தறி துணிகளை யாரும் பயன்படுத்தாததால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : handloom weavers association ,Uthayakumar ,Venkateswara ,Kanchipuram district , Handloom, Life, Uthayakumar, Chairman of Venkateswara Handloom Weavers Association, Kanchipuram District
× RELATED திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சியில் விபத்து தம்பதி உள்பட 11 பேர் பலி