×

பிறந்த நாளில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை: பாதுகாப்பு பணியில் இருந்தபோது பரிதாப சம்பவம்...அதிகாரிகள் டார்ச்சரா? காதல் விவகாரமா?

சென்னை: சென்னையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர், தனது பிறந்த நாள் அன்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி சுமையால் தான் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் கிராமம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன்(25). இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். சிறு வயதில்  இருந்தே மணிகண்டனுக்கு காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்று ஆசை. இதனால் கடும் முயற்சிக்கு பிறகு காவல் துறையில் கடந்த 1.11.2017ம் ஆண்டு தேர்வாகி, கடந்த 1.7.2018ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆவடி  வீராபுரம் 3வது அணியில் சிறப்பு காவல் படை காவலராக பணியாற்றி வந்தார். மணிகண்டனுக்கு கீழ்ப்பாக்கம் லோட்டஸ் காவலர் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.

மணிகண்டனுக்கு நேற்று 26வது பிறந்த நாள். இதனால் தன் பிறந்த நாளை நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறப்பு காவல் படை தலைமை அலுவலகத்தில் தன்னுடன் இரவு பணியில் ஈடுபட்டிருந்த சக  போலீசாருடன் தன்னுடைய 26வது பிறந்த நாளை கொண்டாடி, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உள்ளார்.  அவருக்கு சக காவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் மணிகண்டனுக்கு அவரது நண்பர்கள் மற்றும்  உறவினர்களும் நள்ளிரவில் செல்போனில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவர் 3ம் தேதி தன் பிறந்த நாளை முன்னிட்டு விடுமுறை வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தார். ஆனால்,  ஆனால் அதிகாரிகள் பாதுகாப்பு பணி என்பதால், விடுப்பு வழங்கவில்லையாம். இதனால் தன்  உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுடன் தன் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு பாதுகாப்பு பணிக்கான அறிக்கையை அளித்து விட்டு தொடர் பணியில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அதிகாலை 5.35 மணிக்கு  யாரும் எதிர்பார்க்காத நிலையில் மணிகண்டன் தனது  எஸ்எல்ஆர் வகையை சேர்ந்த துப்பாக்கியால் தனக்கு தானே நெத்தியில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு மணிகண்டன் உடன் பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலர்கள் சத்தம்  வந்த திசை நோக்கி அலறியடித்து ஓடினர். அங்கு மணிகண்டன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்தார்.
இதை பார்த்த சக காவலர்கள் செய்வது அறியாமல் கதறியபடி “பிறந்த நாள் அன்று இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாயே” என்று கூறி அழுது துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல்  ெகாடுத்தனர்.அதன்படி ஆயுதப்படை உயர் அதிகாரிகள் மற்றும் கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் காவலர் மணிகண்டன் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடன் பாதுகாப்பு பணியில் உடன் இருந்த சக காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும், மணிகண்டன் பயன்படுத்திய செல்போனையும் போலீசார் கைப்பற்றி தற்கொலைக்கு முன்பு கடைசியாக அவர் பேசிய எண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமையா அல்லது உயர் அதிகாரிகள்  டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த  பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு வெறு ஒருவருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனாலும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், தற்கொலை  செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மணிகண்டன் உறவினர்கள், சொந்த பிரச்னை எதுவும் இல்லை. பணிசுமை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காவலர் மணிகண்டன் உடலுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர், ஐஜி தமிழ்சந்திரன், டிஐஜி ஜெயகவுரி, துணை கமிஷனர் சம்பத்குமார்  மற்றும் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீசன் ஆகியோர் மலர் வளையம் ைவத்து மரியாதை செலுத்தினர்.மகன் தற்கொலை குறித்து கேள்விப்பட்ட மணிகண்டனின் பெற்றோர் மற்றும் அவரது  இரண்டு சகோதரிகள் உடலை கட்டி பிடித்து அழுத காட்சி பார்ப்போரின் மனதை உருக செய்தது. மணிகண்டன் தற்கொலை குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காவல் துறை உயர்  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் மணிகண்டன் உடலை பெற்றோர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை முடிந்து ேநற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் வேன் மூலம் சொந்த ஊரான பள்ளிப்பட்டு அருகே உள்ள  வெளியகரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பிறகு இன்று சொந்த ஊரிலேயே உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. பணியின் போது சிறப்பு காவல் படை  காவலர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலுறுப்புகள் தானம்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் ஒரு வாரத்துக்கு முன்பே, தனது உடலுறுப்புகள் மற்றவர்களுக்கு உதவட்டும் என்ற நல்லெண்ணத்தில் கண், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய  உறுப்புகளை தானம் செய்வதற்கு பதிவு செய்துள்ளார். மணிகண்டன் தற்கொலை செய்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மணிகண்டனின் உறுப்புகளை பெற்று சென்றனர்.  

தொடரும் சம்பவங்களால் போலீசார் அதிர்ச்சி:

* சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அதிகாலை பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை அடுத்த சோழவந்தான், வாடிப்பட்டியை சேர்ந்த கோபிநாத்(20) தனது  துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி அதிகாலை பாதுகாப்பு பணியில் இருந்த போது மதுரை பெருங்குடியை சேர்ந்த அருண்ராஜ்(26) துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28) கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Terror ,birth ,suicide , Gun, guards suicide, security work, officers, love
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல் கைதான 4 பேர்...