×

கடைசி போட்டியில் அமர்க்களமான வெற்றி தொடரை 4-1 என கைப்பற்றி இந்தியா அசத்தல்: நியூசி. மண்ணில் புதிய சாதனை

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 4-1 என்ற  கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். கலீல் அகமது,  குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, டோனி, விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் கப்திலுக்கு  பதிலாக கோலின் மன்றோ இடம் பெற்றார்.அதிர்ச்சி தொடக்கம்: இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், தவான் களமிறங்கினர். போல்ட் - ஹென்றி வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க  முடியாமல் ரோகித் 2, தவான் 6, ஷுப்மான் கில் 7, எம்.எஸ்.டோனி 1 ரன்னில் அணிவகுப்பு நடத்த, இந்தியா 9.3 ஓவரில் 18 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து விழிபிதுங்கியது.  ஹாமில்டன் போட்டி போலவே 100 ரன்னுக்கும் குறைவாக சுருட்டிவிடலாம் என நியூசி. அணியினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.ராயுடு - ஷங்கர் போராட்டம்: இந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு அம்பாதி ராயுடு - விஜய் ஷங்கர் ஜோடி கடுமையாகப் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டது.  இருவரும் இணைந்து 98 ரன் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷங்கர் 45 ரன் (64 பந்து, 4 பவுண்டரி) எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து ராயுடு  - கேதார் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராயுடு 90 ரன் (113 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன்  திரும்பினார்.ஹர்திக் அதிரடி: கேதார் ஜாதவ் 34 ரன் (45 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஹென்றி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய ஹர்திக்  பாண்டியா சிக்சர்களாக விளாசித் தள்ள இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த அவர் 45 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி  நீஷம் பந்துவீச்சில் போல்ட் வசம் பிடிபட்டார். புவனேஷ்வர் 6, ஷமி 1 ரன்னில் வெளியேற, இந்தியா 49.5 ஓவரில் 252 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சாஹல் (0)  ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் ஹென்றி 4, போல்ட் 3, நீஷம் 1 விக்கெட் வீழ்த்தினர். 200 ரன்னுக்கும் குறைவான இலக்கை துரத்தலாம் என  நினைத்திருந்த நியூசிலாந்து, ஹர்திக் பாண்டியாவின் எதிர்பாராத அதிரடியால் 50 ஓவரில் 253 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன்  களமிறங்கியது. மன்றோ, நிகோல்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். நிகோல்ஸ் 8 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கேதார் வசம் பிடிபட்டார்.

ஓரளவு தாக்குப்பிடித்த மன்றோ 24 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேற, அடுத்து வந்த ராஸ் டெய்லர் 1 ரன் மட்டுமே எடுத்து ஹர்திக் பந்துவீச்சில்  எல்பிடபுள்யு ஆனார். நிதானமாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 39 ரன் (73 பந்து, 3 பவுண்டரி), டாம் லாதம் 37 ரன் (49 பந்து, 3 பவுண்டரி) எடுத்து பெவிலியன்  திரும்பினர். கிராண்ட்ஹோம் 11 ரன் எடுத்து சாஹல் சுழலில் பலியானார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடி மிரட்டிக் கொண்டிருந்த ஜிம்மி நீஷமை (44 ரன், 32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி அபாரமாக ரன்  அவுட் செய்து வெளியேற்றினார். ரன் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்டில் 10, சான்ட்னர் 22, போல்ட் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து அணி  44.1 ஓவரிலேயே 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹென்றி 17 ரன்னுடன் (9 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சாஹல்  3, ஷமி, ஹர்திக் தலா 2, புவனேஷ்வர், கேதார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வென்று ஹாமில்டன் தோல்விக்கு பழிதீர்த்ததுடன்,  4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. நியூசிலாந்து மண்ணில் விளையாடிய ஒரு தொடரில் இந்திய அணி 4 வெற்றிகளைப் பதிவு செய்வது இதுவே  முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ராயுடு ஆட்ட நாயகன் விருதும், ஷமி தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20  தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி வெலிங்டனில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,India ,Newcastle , last match, India, series 4-1 , match, Newcastle. New record in soil
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி