×

ஆண்களை குறிவைத்து கடித்து அட்டகாசம்: 11வது மயக்க ஊசியில் மடங்கிய குரங்கு

சீர்காழி: நாகை  மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த  ஒரு மாதத்திற்கு மேலாக ஆண் குரங்கு ஒன்று இப்பகுதி மக்களையும்,  கால்நடைகளையும் கடித்து அச்சுறுத்தி வந்தது. குறிப்பாக இந்த குரங்கு ஆண்களை மட்டுமே குறிவைத்து கடித்தது. இவ்வாறு 17 பேரை கடித்திருந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு  வெளியே வரவே அச்சப்பட்டனர். குரங்கை பிடிக்க வனத்துறையினர் தென்னலக்குடியில் முகாமிட்டு கூண்டு, வலை  வைத்து கடந்த 10 நாட்களாக காத்திருந்தனர். ஆனால், குரங்கு கூண்டு  மற்றும் வலையில் சிக்காமல் போக்குக்காட்டி வந்தது. இந்நிலையில் ஒரத்தநாட்டில்  உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் முத்துக்கிருஷ்ணன்,  செந்தில்குமார் கொண்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி குரங்கை பிடிப்பதற்காக  நேற்று முன்தினம் மாலை வந்தனர். இரவோடு இரவாக குரங்கை தேடி கால்நடை  மருத்துவ குழுவினர் சுற்றி வந்தனர்.

நேற்று காலை மருத்துவ குழுவினர் 10 முறை குரங்குக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதற்கு  மசியாத குரங்கு ஊசிகளை பிடுங்கி எறிந்து விட்டு சாதாரணமாக சுற்றியது. மருத்துவ குழுவினரும் அசராமல் குரங்கை பின்தொடர்ந்தனர். மாலை 5 மணியளவில் ஒரு  தொகுப்பு வீட்டிற்குள் சென்று பதுங்கியது. அப்போது சுதாரித்துக்கொண்ட  வனத்துறையினர் உடனே வீட்டின் கதவை அடைத்து சாதுர்யமாக ஒருவர் மட்டும் மயக்க  ஊசி உள்ள துப்பாக்கியுடன் உள்ளே சென்று ஊசியை செலுத்தினார். இதில் மயங்கிய குரங்கை லாவகமாக  பிடித்தனர்.  பின்னர் பிடிபட்ட குரங்கை சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு  கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இன்று காலை குரங்கை வனப்பகுதியில் விட்டனர். இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men , Male, cocktail, axis of the needle
× RELATED அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்