×

வங்கியில் 600 கோடி கடன் மோசடி: தொழில் அதிபர் சிவசங்கரனின் 225 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: வங்கியில் 600 கோடி கடன் வாங்கி சிவசங்கரன் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது 225 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.  ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் இங்கிலாந்தின் வெர்ஜின் தீவில் இருந்து செயல்படும் ஆக்சில் சன்ஷைன் லிமிடெட்,  பின்லாந்தில் இருந்து செயல்படும்  வின் விண்டு ஒய் என்ற நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்கு டெல்லி, மும்பை, உள்ளிட்ட  10 மாநகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. 2010ம் ஆண்டு அக்டோபரில் இந்த நிறுவனத்திற்கு சென்னை ஐடிபிஐ வங்கி 322.40 கோடி கடன் வழங்கியது. ஆனால், நிறுவனத்தின்  செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இது திவாலான நிறுவனம் என்று பின்லாந்து  நீதிமன்றம் கடந்த 2013 அக்டோபரில் அறிவித்தது.

இந்நிலையில், இந்த நிறுவனங்களின் பெயரில் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  ஐடிபிஐ வங்கியில் 523 கோடி ரூபாய் சிவசங்கரன் கடன்  வாங்கியுள்ளார். திவாலாக அறிவிக்கப்பட்ட நிறுவனத்திற்கே, ஏற்கனவே கடன் கொடுத்த வங்கியே மீண்டும் 523 கோடி கடன் வழங்கியது. ஆனால்,  சிவசங்கரனின் நிறுவனம், கடனைத் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு முரணாக வெளிப்படையாக வங்கி கடன் முறைகேடு செய்ததாக சிவசங்கரன் மற்றும் அவரது 2  நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேநேரத்தில், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் அந்த கடன் தற்போது, 600 கோடி ரூபாயாக  உயர்ந்துள்ளது. இது குறித்து ஐடிபிஐ வங்கி நிர்வாகம் கடனை திரும்ப பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அதனால் நிர்வாகம்  சிபிஐயிடம் புகார் அளித்தது. புகாரில் உண்மை இருப்பதை விசாரணையில் தெரிந்துகொண்ட சிபிஐ அதிகாரிகள் வங்கி கடன் மோசடி செய்த சிவசங்கரன், அவரது ஆக்சில்  சன்ஷைன் லிமிடெட் மற்றும்  வின் விண்டு ஒய் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்திய தண்டனைச் சட்டம் 120 பி(கூட்டு சதி),  420(மோசடி), 409 (நம்பிக்கை மோசடி), 13(2) ரெட் வித் 13(1) டி என்ற ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் சிவசங்கரனுக்கு மோசடியில் துணையாக இருந்த அவரது மகன் சரவணன், ஐடிபிஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் என 38 பேர்,  சிவசங்கரனின் 2 கம்பெனிகள் மீது பொதுமக்களின் பணத்தை திட்டமிட்டு மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சிவசங்கரனுக்குச் சொந்தமான அலுவலகங்கள்,  சென்னையில் உள்ள வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேநேரத்தில், சிவசங்கரன் லண்டன் தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. இந்தநிலையில், சிவசங்கரின் மீது, அமலாக்கத்துறையினரும் நிதி மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள சிவசங்கரனின் 224.6 கோடி மதிப்புள்ள வீடு, அலுவலகத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக முடக்கினர். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிவசங்கரனின் வீடு, காலி மனை மற்றும் சிவா குரூப் நிறுவனங்கள், ஆக்சில் சன்ஷைன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் தி.நகரில் உள்ள அலுவலகங்கள் இயங்கும் சொத்துக்களை முடக்கினர். அதைத் தவிர 35.32 லட்சம் மதிப்புள்ள கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக, அந்த துறையின் இணை இயக்குனர் கே.எஸ்.வி.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivasankaran ,bank , 600 crore credit fraud, businessman Sivasankaran, 225 crore assets and enforcement
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...