×

நெருங்கும் கோடை காலம் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் தலைநகரம்

* என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
* முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு இருப்பதால் வரும் கோடை காலத்தில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதை சமாளிக்க தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட 15  மண்டலங்களில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து  பல்லாவரம், தாம்பரம், பம்மல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. இந்தப் பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய  பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரி உள்ளிட்ட நான்கு ஏரிகளில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்தது. இதனால் சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்  நிரம்பவில்லை. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 186 மி.கன அடியும், (மொ.கொ 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மொ.கொ. மி.கனஅடி), செங்குன்றம் ஏரியில் 713 மி.கனஅடியும் ( மொ.கொ. 3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 49 மி.கனஅடியும் ( மொ.கொ.3645 மி.கனஅடி) தண்ணீர் மட்டுமே இருப்பு  உள்ளது. இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை  நிலவரப்படி வெறும் 996.42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 8 சதவீதம். இதே நாளில் கடந்த ஆண்டு நான்கு ஏரிகளிலும் சேர்த்து 4,095 மி.கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது.

நான்கு ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே  சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு 800 மில்லியன் கன அடி குடிநீர் வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே 650 மில்லியன் கன அடி குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக இதுவும் குறைக்கப்பட்டு தற்போது 550 மில்லியன் கன அடி குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும் சில இடங்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னை குடிநீர் தட்டுப்பாடு தற்போதே தொடங்கி  விட்டதாக  பொது மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்கள் கழித்து இந்த தண்ணீர் கூட கிடைக்குமா என்று பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பருவழை குறைவாக பெய்துள்ளது என்று தெரிந்த போதே குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அரசு உரிய நடவடிக்கை  எடுத்திருக்க வேண்டும் என்றும் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் தாமதமானது என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மழை நீர் சேகரிப்பு முறையை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்து இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் மற்றும் எருமையூர் கல் குவாரியிலிருந்து  மழைநீரை எடுக்கும் திட்டம் , 350 தனியார் விவசாய கிணறுகளிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டம், ரெட்டை ஏரி, பெரும்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரியிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதைத் தவிர்த்து தினமும் காலை 6 மணி முதல் பொறியாளர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பருமழை குறைந்து கொண்டே வரும் நிலையில் கோடை காலம் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வரும் கோடை காலத்தை சமாளிக்க அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைவாக செயல்படுத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்ய அரசு எல்லா விதமான நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புகார் அளிக்க
அசோக் டாங்ரே மேலாண் இயக்குனர்: 044 - 28459000; புகார் மையம்: 044 - 4567 4567
பகுதி வாரியான தொடர்பு எண்கள்: http://www.chennaimetrowater.tn.nic.in/contact_whoswho.html

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : capital city , Summer, water shortage
× RELATED கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள்...