×

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீர் மாற்றம்: புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்: வசந்தகுமார் உட்பட 4 பேர் செயல் தலைவர்கள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டு புதிய தலைவராக கடலூர் தொகுதி முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரியை கட்சி மேலிடம் நியமித்துள்ளது. மேலும் வசந்தகுமார் உட்பட 4 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த திருநாவுக்கரசருக்கும் மற்ற மூத்த தலைவர்களுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்து வந்தது. அவரது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேரடியாகவே மேலிடத்தில் புகார் செய்தார். அவரை தொடர்ந்து ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, வசந்தகுமார், கிருஷ்ணசாமி, செல்லக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அவரை மாற்ற வலியுறுத்தி டெல்லியில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கினர். ஆனாலும் டெல்லி மேலிடம் தலைவர் மாற்றத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது. இதனால் தமிழக காங்கிரசில் திருநாவுக்கரசர் தொடர்ந்து நீடிப்பாரா? மாற்றப்படுவாரா? என்ற குழப்பம் கட்சியினர் மத்தியில் நீடித்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் நடந்த காங்கிரஸ் விழாவில் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், தேர்தல் வரை நான் தான் தலைவர் என்று திருநாவுக்கரசர் கூறியது மற்ற தலைவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இதையடுத்து, அவர்கள் டெல்லிக்கு சென்று ப.சிதம்பரம் தலைமையில் மூத்த தலைவர்களை சந்தித்து திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனாலும் மேலிடம் எந்த முடிவும் தெரிவிக்காமல் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தது. மேலும் அவர் எந்த நேரமும் மாற்றப்படலாம் என்றும் கோஷ்டி தலைவர்கள் தகவல் பரப்பி வந்தனர்.  இந்நிலையில், திருநாவுக்கரசர் தொடர்ந்து டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எதிர் கோஷ்டி தலைவர்கள் மேலிடத்தில் புகார் செய்தனர். மேலும் அவரது சம்பந்தியும் டிடிவி.தினகரன் கட்சியின் மூத்த நிர்வாகியுமான இசக்கி சுப்பையா மூலம் டிடிவி.தினகரனுடன் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்ைத நடத்தி வருவதாகவும் அழுத்தமான குற்றச்சாட்டை கோஷ்டி தலைவர்கள் மேலிடத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், தென்மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்த ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக மேலிட பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத் ஆகியோருடன் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் திருநாவுக்கரசரையும் அவரச அழைப்பாக டெல்லி வரும்படி அழைத்திருந்தனர். அவரும் புறப்பட்டு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி ராகுல்காந்தி கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, திருநாவுக்கரசர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதித்துள்ளனர்.

 மேலும் எதிர்கோஷ்டி தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திருநாவுக்கரசரை எதிர்ப்பதால் அவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கட்சியின் மூத்த தவைர்களிடம் கருத்து கேட்டு, தலைவர் மற்றும் 4 செயல் தலைவர் பதவிகளை போட வேண்டும் என்றும் ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பட்டியலும் உடனடியாக தயார் செய்யப்பட்டு ராகுல்காந்தி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
 இந்ந்நிலையில், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்றிரவு தமிழக காங்கிரஸ் தவைர் மாற்றத்துக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,‘‘ தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்படுகிறார். மேலும் செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் ஏமாற்றம்
திருநாவுக்கரசர் தலைமையில் தேர்தலை சந்திக்க மாட்டோம் என்று எதிர் கோஷ்டி தலைவர்கள் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டிருந்தனர். ஆனாலும் எந்த புகார் செய்தாலும் தேர்தல் நெருங்கிய நிலையில் தலைவர் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. திருநாவுக்கரசர் ஆதரவாளர்களும் அதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டிருப்பது அவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Tamil Nadu ,Vasanthakumar 4 ,Tirunavukkarar ,KS Azhagiri , Chief Minister of Tamil Nadu, Tirunavukkarar, Change, KS Abhigari, Vasanthakumar, Executive Leaders
× RELATED மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக...