×

இன்று கடைசி ஒருநாள் போட்டி: ஹாமில்டன் படுதோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

வெலிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வெஸ்ட்பேக் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. நேப்பியர், மவுன்ட் மவுங்கானுயி மைதானங்களில் நடந்த முதல் 3 போட்டியிலும் அபாரமாக வென்று 3-0 என முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் கேப்டன் விராத் கோஹ்லியின் சுமையை குறைக்கும் வகையில் கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹாமில்டனில் நடந்த 4வது போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசிய நிலையில், டிரென்ட் போல்ட்டின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா 30.5 ஓவரிலேயே வெறும் 92 ரன்னுக்கு சிருண்டது.
சாஹல் 18*, ஹர்திக் 16, குல்தீப் 15, தவான் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 5, கிராண்ட்ஹோம் 3, ஆஸ்டில், நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து எளிதாக வென்றது. நிகோல்ஸ் 30, டெய்லர் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. ஹாமில்டனில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்ப்பதுடன் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா வரிந்துகட்டுகிறது.

இளம் வீரர் ஷுப்மான் கில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கணிசமாக ரன் குவித்தால் அணியில் தனது இடத்தை உறுதி செய்துகொள்ளலாம்.  நியூசி. அணியில் காயம் அடைந்துள்ள கப்திலுக்கு பதிலாக கோலின் மன்றோ சேர்க்கப்படுவார் என தெரிகிறது. போல்ட்டும் காயத்தால் அவதிப்படும் நிலையில், அவர் விளையாடுவது குறித்து கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். மேலும் ஒரு ஆறுதல் வெற்றியைப் பெறும் உத்வேகத்துடன் நியூசிலாந்து களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்),  ஷிகர் தவான், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ஷுப்மான் கில், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா.
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், ராஸ் டெய்லர், டாம் லாதம், மார்டின் கப்தில், கோலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் போல்ட், ஹென்றி நிகோல்ஸ், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ஜிம்மி நீஷம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,India ,Hamilton , ODI match, Hamilton, fiasco, India
× RELATED மைதான் இந்தி விமர்சனம்