×

குழித்துறை நகராட்சியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம்: கடும் அவதியில் பொதுமக்கள்

மார்த்தாண்டம்: குமரியில் உள்ள 4 நகராட்சிகளில் மேற்கு மாவட்டத்தில் மிக முக்கிய நகராட்சியாக குழித்துறை விளங்கி வருகிறது. இங்கு மக்கள்தொகையும், மக்கள் அடர்த்தியும் மிக அதிகமாக உள்ளது. 21 வார்டுகளை கொண்டு குழித்துறை நகராட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் ஆற்றில் கிழக்கு கரையில் உள்ள 11 வார்டுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், மேற்கு கரையில் உள்ள 10 வார்டுகளுக்கு உறைகிணற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் பம்ப் செய்யப்பட்டும் விநியோகிக்கப்படுகிறது. கடந்த திமுக நிர்வாகம் இருந்தபோது, ஞாறாம்விளை அருகே ஒரு கோடி செலவில் பில்டர் ஹவுஸ் அமைக்கப்பட்டது. ஆனாலும் நகராட்சி பகுதிகளில் 4, 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கின்றனர். அதுவும் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மார்த்தாண்டம் மேம்பால பணிகள் முடிந்து வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் கீழ்ப்பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும்போது அவ்வப்போது குடிநீர் குழாய்கள் உடைந்து வருவதால் தண்ணீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு தனியார் கேன் வாட்டரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இதை குடிக்கவோ, சமையல் செய்ய, குளிக்க என எந்தவொரு முக்கிய தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி முன்னாள் கவுன்சிலர் பொன் சகாதேவன் கூறும்போது, ‘குழித்துறை நகராட்சி பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. 4, 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கின்றனர். அதுவும் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இல்லை. தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், உறைகிணற்றை பல இடங்களில் உடைத்துவிட்டு, ஆற்றுநீர் நேரடியாக கலக்கும்படி செய்துள்ளனர். இவ்வாறு விநியோகிக்கும் நீர் எந்தவிதத்தில் பாதுகாப்பாக இருக்கும். மேலும் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன. மேலும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தற்போது சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருவதால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைந்து விடுகின்றன. இவற்றை சரிசெய்தாலும், மீண்டும் உடைவதால் குடிநீருடன் சாக்கடை மற்றும் கழிவுநீர் கலந்து விடுகிறது.

இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் குடிநீர் கலங்கிய நிலையில், மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்த முடிவதில்லை. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதுபோன்ற அவலநிலைக்கு காரணம். பலமுறை நிர்வாகத்திடம் எடுத்து கூறியும் எந்தவித பலனும் இல்லை. பொதுமக்கள் நலனில் நகராட்சி நிர்வாகம் அக்கறை கொள்ளாமலும், பிரச்னைகளை எடுத்து கூறினாலும், ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருகிறது. இந்நிலைக்கு விடிவு எப்போது வரும் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : municipality ,Kuzhithurai ,disaster , Civilian, drinking water, sewage
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு