×

சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி-காளைகள் பதிவு செய்யும் பணி மும்முரம்

சேலம் : சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த  அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் பதிவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் கொரோனா பரிசோதனை எடுத்து தயாராகி வருகின்றனர்.  பொங்கல் பண்டிகை நடப்பாண்டு வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் விழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு உள்பட பல வீர விளையாட்டுக்கள் நடப்பது வழக்கம். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகள் ஜல்லிக்கட்டு விழாவுக்கு பிரசித்தி பெற்றது. இந்த பகுதிகளை தவிர சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, சேலம் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, மல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் அலங்காநத்தம்,  பொட்டிரெட்டி பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  எருதாட்ட விழா நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு விழாவை பார்க்க வெளிநாட்டினர், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கடந்த ஒரு மாதமாக பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பொங்கலையொட்டி வரும் 17ம் தேதி ஆத்தூரை அடுத்த கூடமலையிலும், கடம்பூர், உலிபுரம், கொண்டையம்பட்டி, ஏத்தாப்பூர் முத்துநகர், மல்லூர் ஜெகல்நாயக்கன்பட்டியிலும் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது.நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதாட்டம் நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். திறந்த வெளியில் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பார்வையாளர் உடல்வெப்ப அளவுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கொரோனா ெதாற்று இல்லை என்ற சான்று கட்டாயம் இருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு விழா நடக்கும் இடங்களில் காளைகள் பதிவு செய்யும் பணி, மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆத்தூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, கூலமேடு, கடம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும். நடப்பாண்டு வரும் 17ம் தேதி கூடமலையில் ஜல்லிக்கட்டு  விழா நடத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இவ்விழாவையொட்டி கடந்த ஒரு மாதமாக காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண்ணை குத்துதல், நடைப்பயிற்சி, காலிநிலத்தில் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிடுதல் உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் அதிகபட்சம் 300 காளைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும், மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இதையொட்டி மாடுபிடி வீரர்கள் கடந்த இரு நாட்களாக கொரோனா பரிசோதனை எடுத்து வருகின்றனர். இதில் நெகட்டிவ் என வரும் வீரர்களின் பெயர்களை மட்டுமே பதிவு செய்து வருகிறோம். இது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு விழாவுக்கு முதல் நாள் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். அந்த பரிசோதனையிலும் நெகட்டிவ் என்று வரும் வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி-காளைகள் பதிவு செய்யும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Salem ,Bulls ,Thirumuram ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்