×

தலைவர் பதவியில் திருநாவுக்கரசர் நீடிப்பாரா? தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பது குறித்து டெல்லியில்  ராகுல்காந்தி தலைமையில் மேலிட தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மேலும் தேர்தல் பணிக்குழு அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதால் திருநாவுக்கரசருக்கு மேலிடம் திடீர் அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி மோதல் டெல்லி மேலிடத்துக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திருநாவுக்கரசர் தலைமையில் தேர்தலை சந்திக்க முடியாது என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் மேலிட பொறுப்பாளர்களிடம் நேரடியாக தெரிவித்து அவரை தலைவர் பதவியில் மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்.

 அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ப.சிதம்பரம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், செல்லக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்ட காங்கிரஸ் நிகழ்ச்சியில், ‘இந்த தேர்தல் முடியும் வரை நான்தான் தலைவர். அதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம்’ என்று திருநாவுக்கரசர் பேசியது எதிர் கோஷ்டிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அடுத்த நாளே அனைவரும் டெல்லி புறப்பட்டு சென்று மேலிட தலைவர்களிடம் இதுபற்றி புகார் செய்தனர். அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் மேலிடமோ மவுனம் சாதித்தது மட்டுமல்லாமல், அதற்கான எந்த பதிலும் சொல்லாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் டெல்லி சென்றவர்கள் சுவரில் அடித்த பந்து போல திரும்பி வந்துவிட்டனர்.ஒவ்வொரு நாளும் மாற்றத்துக்கான அறிகுறி எதுவும் தெரிகிறதா என்பது குறித்து அவர்கள் விசாரித்து நொந்து கொண்டதுதான் மிச்சம். தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தலைவர் மாற்றத்தை ராகுல்காந்தி விரும்பவில்லை என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.  இதற்கிடையே, தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பட்டியலை திருநாவுக்கரசர் மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார். அதில் அவரது ஆதரவாளர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளதாக எதிர் கோஷ்டிகள் மீண்டும் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இப்படியே போனால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படும் என்று மேலிடத்துக்கு புகாருக்கு மேல் புகார் அனுப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திருநாவுக்கரசருக்கு நேற்று மேலிடம் திடீர் அழைப்பு விடுத்தது. அதை தொடர்ந்து அவர் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தேர்தல் பணிக்குழு பட்டியலை இறுதி செய்வதற்காகவே திருநாவுக்கரசருக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே, தென் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தமிழக காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகவும் தமிழக மேலிட பொறுப்பாளர்கள் முகுல்வாஸ்னிக் மற்றும் சஞ்சய் சத், சிரிவெல்ல பிரசாத் ஆகியோருடன் ராகுல்காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழக காங்கிரஸ் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்துக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பது குறித்து டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tirunavukkarar ,chairperson ,Leaders ,Delhi , Tamilnadu Congress leader, Thirunavukkarar, will stay
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...