×

மகளிர் கிரிக்கெட்: 3வது போட்டியில் நியூசி.க்கு ஆறுதல்: தொடரை கைப்பற்றியது இந்தியா

ஹாமில்டன்: நியூசிலாந்து மகளிர் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இந்திய அணி 44 ஓவரில் 149 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தீப்தி ஷர்மா அதிகபட்சமாக 52 ரன் (90 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். ஹர்மான்பிரீத் 24, ஹேமலதா 13, ஜெமிமா, ஜுலன் தலா 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் அன்னா பீட்டர்சன் 4, லீ டாஹுஹு 3, அமெலியா கேர் 2, காஸ்பரெக் 1 விக்கெட் வீழ்த்தினர்.  அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 29.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. சூஸி பேட்ஸ் 57 ரன் (64 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), லாரென் டவுன் 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் சாட்டர்த்வெய்ட் 66 ரன் (74 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), சோபி டிவைன் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அன்னா பீட்டர்சன் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2-1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றிய நிலையில், அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் டி20 வெலிங்டனில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

மித்தாலி 200
மகளிர் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமை இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டன், செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார். இதுவரை 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 180 இன்னிங்சில் 6622 ரன் (அதிகம் 125*, சராசரி 51.33, சதம் 7, அரை சதம் 52) விளாசி உள்ளார். இதில் 51 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 10 டெஸ்ட் மற்றும் 85 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,match ,Newcastle ,India , Women's Cricket, India, New Zealand
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ