×

குடந்தை மடத்தில் யார் பீடாதிபதி என்பதில் உச்சக்கட்ட மோதல் குடும்ப வாழ்க்கை நடத்துபவர் மடாதிபதியாகலாமா?

* நீலகண்ட சாரங்க தேசிகேந்திரரை விரட்டியடிப்போம்
* அடிஉதையுடன் தப்பி ஓடிய மடாதிபதி ஆவேசம்
* பதற்றமான சூழல் நிலவுதால் போலீஸ் குவிப்பு

கும்பகோணம்:  கும்பகோணம் மடத்தின் மடாதிபதியாக இருக்கும் நீலகண்ட சாரங்கன் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்துகிறார். அவர் மடாதிபதியாக நீடிக்க முடியாது. 3ம் தேதி மடத்துக்குள் புகுந்து அவரை விரட்டியடிப்போம் என தப்பி ஓடிய மடாதிபதி கூறி உள்ளார். இதனால், கும்பகோணம் மடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு  வீரசைவ மடம் செயல்படுகிறது. இந்த மடத்திற்கு தமிழகம், கர்நாடகத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள், கோயில்கள் மற்றும் ரொக்கப்பணம் உள்ளது. இந்த மடத்தின் 97வது பீடாதிபதியான லஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமி  பொங்கல் பண்டிகை முடிந்ததும் பெங்களூரு சென்றிருந்தார்.இந்நிலையில், கடந்த 29ம் தேதி மடத்தின் நிர்வாக கமிட்டியினர்  கூடி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமியை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டு  புதிய மடாதிபதியாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமியை மடாதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். சித்ரதுர்கா மடத்தின் ஸ்ரீசிவமூர்த்தி முருக சாராணாரூ பீடாதிபதி ஸ்ரீமுருகராஜேந்திரர் இந்த பட்டாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

பதவி பறிபோனதை அறிந்த ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமி 29ம் தேதி நள்ளிரவு தனது ஆதரவாளர்கள் 30 பேருடன் கும்பகோணம் மடத்திற்கு வந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அங்கிருந்த புதிய மடாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களை அடித்து விரட்டினர். அவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டனர்.  இதில் காயமடைந்த புதிய மடாதிபதி உள்பட 3 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து  நீலகண்ட சாரங்க தேசிகர் தானே மடாதிபதி என பிரகடனம் செய்து அவரது ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘பட்டாபிசேகம் செய்து கொண்ட  மடாதிபதி மற்றும் அவருடன் வந்தவர்கள் ₹10 லட்சம் ரொக்கம்,  5 கிலோ வெள்ளிப்பொருட்களை அள்ளிச்சென்று விட்டனர். மடத்தின் வங்கி இருப்பு ₹120 கோடியை கொள்ளையடிக்க இந்த பட்டாபிசேகம் நடத்தப்பட்டதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் புகார் கூறினார். இத தொடர்பாக அவர் போலீசிலும் புகார் செய்தார். அத்துடன் மடத்தின் நிர்வாக குழுவையும் கலைத்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமி மற்றும் மடத்தின் சட்ட ஆலோசகரும், ஆலோசனைக்குழு உறுப்பினருமான குருசாமி ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக இவர் பிரமச்சாரியத்தை கைவிட்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். மடத்தின் சமையலரான கங்காதரனை இளைய மடாதிபதி என தன்னிச்சையாக அறிவித்தார். கங்காதரனின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரில் நீலகண்ட சுவாமி பெயர் அச்சிட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. தற்போது, நீலகண்ட சுவாமியும், கங்காதரனின் தாயார் சுகந்தம்மாளும் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் சமையலராக வந்த கங்காதரனை இளைய மடாதிபதியென அறிவித்தார்.

பின்னர், மடத்தின் ஆகம விதிகளுக்கு எதிராக கங்காதரன் தவறு செய்துவிட்டு மடத்தை விட்டு ஓடினார். பின்னர், கங்காதரன் வந்தபோது அவரை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்றோம். ஆனால் நீலகண்ட சுவாமிகள், தனது மகன் என்ற காரணத்தால் மீண்டும் மடத்துக்குள் அனுமதித்தார். அத்துடன் கும்பகோணம் மடத்தின் பின்புறமுள்ள இடத்தை தனியாரிடம் ₹2 கோடிக்கும், மடத்தின் முன்புறமுள்ள 10 கடைகளை ₹42 லட்சத்துக்கும், திருவாரூரில் 32 ஆயிரம் சதுர அடி இடத்தை ₹2 கோடிக்கும், கர்நாடகாவில் 8 ஏக்கர் நிலத்தை ₹5 கோடிக்கு விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது.அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீலகண்டன் சுவாமி முறைகேடு செய்துள்ளதாக கோர்ட்டே அவரை நீக்கியது. அப்போது, நீலகண்ட சுவாமியை நீக்கக்கூடாது என நாங்களே தடை உத்தரவு வாங்கினோம். இப்போது அந்த தடை உத்தரவை திரும்ப பெறவுள்ளோம். இதனால் அவரது மடாதிபதி பதவி பறிபோகும். வரும் 3ம் தேதி வீரசைவ பெரிய மடத்தின் பக்தர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடக்கிறது. அன்றைய தினம் நாங்கள் அனைவரும் வீரசைவ மடத்துக்கு சென்று நீலகண்ட சுவாமியிடம் இனிமேல் மடாதிபதியாக இருக்க கூடாது, குடும்ப வாழ்க்கையில் உள்ள நீங்கள் (நீலகண்டனும்) உங்களது மகன் கங்காதரனும் சட்டப்படி மடாதிபதியாக இருக்க கூடாது என்பதால் வெளியேற வேண்டுமென கூறுவோம்.

பின்னர் புதிய மடாதிபதியான பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமியை அந்த ஆசனத்தில் அமர வைப்போம். நாங்கள் கோர்ட்டில் உள்ள தடை உத்தரவை திரும்ப பெற்ற பிறகு நீலகண்டன் மடாதிபதியில் இருந்து தானாகவே விலகி விடுவார். விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது என்றார். ல ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான்  மடத்தை விட்டு செல்ல மாட்டேன். யாரையும் மடாதிபதியாக இருக்க அனுமதிக்கமாட்டேன். யார் வந்தாலும் விரட்டியடிப்பேன்  என்றார். இதனால் குடந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மடம் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர். இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதும் நிலை உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நீலகண்டன் ஆதரவாளர்கள் குவிகிறார்கள்
குடந்தை மடத்தை  பசவ முருக சாரங்கனின் ஆதரவாளர்கள் 3ம் தேதி கைப்பற்றப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இன்று காலை முதல் அவரது ஆதரவாளர்கள் ரகசிய இடத்தில் தங்கி உள்ளனர். அதே நேரத்தில் நீலகண்ட மடாதிபதியின் ஆதரவார்கள் மடத்திற்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கர்நாடகத்தில் இருந்து கார், வேன்களில் வந்து குவிந்த வண்ணம் இருப்பதால் 3ம் தேதி இரு கோஷ்டிகளும் பயங்கர மோதலில் ஈடுபட ஆயத்தமாக இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே இரு மடாதிபதிகளும்  தமிழகம், கர்நாடகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின்  ஆதரவையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

முறைகேடு ஆவணங்கள் தயார்
 குடந்தை வீரசைவ மடத்தில் மடாதிபதியாக உள்ள நீலண்ட மடாதிபதி,  பிரம்மச்சாரி இல்லை, அவர் குடும்பம் நடத்தி வருகிறார். அவர் எந்தெந்த சொத்துக்களை யார், யாருக்கு விற்று எவ்வளவு பணம் பெற்று உள்ளார்,  தனது மகனான் கங்காதரனை இளைய மடாதிபதியாக நியமித்து உள்ளார். அதில் கங்காதரனின் தந்தை பெயரில் நீலகண்டன் பெயர் இடம் பெற்று உள்ளது.குடந்தை, திருவாரூர் மற்றும் கர்நாடகத்தில் மடத்திற்கு உள்ள சொத்துக்கள் எவ்வளவு, அதன் மூலம் வரும் வருமானம் எவ்வளவு, அதில் நீலகண்ட மடாதிபதி எவ்வளவு முறைகேடுகள் செய்துள்ளார் என்பதற்கான ஆவணங்களை எதிர் அணியான பசவ முருக மடாதிபதி மற்றும் அவரது ஆதவாளர்கள் தயாரித்து வைத்துள்ளனர்.  இதற்காக சில லெட்ஜர்களை மடத்தில் இருந்து கைப்பற்றி வைத்து உள்ளனர். இதன் நகல்களை போலீசில் கொடுக்கவும், கோர்ட்டில் தாக்கல் செய்யவும் இருப்பதாக  பசவ முருக சாரங்க மடாதிபதியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மடத்தின் சமையலரான கங்காதரனை இளைய மடாதிபதி என தன்னிச்சையாக அறிவித்தார். கங்காதரனின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரில் நீலகண்ட சுவாமி பெயர் அச்சிட்டுள்ளது. தற்போது, நீலகண்ட சுவாமியும், கங்காதரனின் தாயார் சுகந்தம்மாளும் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pedigal ,monastery ,clash , Being,pedigal, queen ,monastery ,family life?
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...