×

வாயால் ஊதினால் சர்க்கரை அளவை காட்டும் கருவி : நெல்லை அறிவியல் மைய விழாவில் இடம்பெற்றுள்ள அபூர்வ கண்டுபிடிப்புகள்

நெல்லை: வாயால் ஊதினால் சர்க்கரை அளவு மற்றும் வாய் துர்நாற்ற அளவு போன்றவைகளை கண்டுபிடிக்கும் கருவி, உழவு செய்யவும் நடவும் ஒரே ரோபோட்டிக் இயந்திரம், நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் இயந்திரம் போன்ற பல்வேறு புதிய படைப்புகள் நெல்லை அறிவியல் மையத்தில் நடைபெறும் புத்தாக்க விழாவில் இடம் பெற்றுள்ளன. நெல்லை அறிவியல் மையத்தில் நேற்று தொடங்கிய புத்தாக்க திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் தனியாரின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்ற கண்காட்சி நடக்கிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் அரசு உதவிபெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிகள் ஐஸ்வர்ய லட்சுமி, மாரீஸ்வரி, அழகு மீனா ஆகியோர் தங்களது தொழில்நுட்ப ஆசிரியர் இந்துமதி உதவியுடன் நவீன உழவு ரோபோட்டிக் இயந்திர மாதிரியை வடிவமைத்துள்ளனர்.

பொக்லைன் இயந்திரம் போல் உள்ள இந்த ரோபோவின் முன்பகுதியில் உள்ள கலப்பை மூலம் நிலத்தை சீராக பண்படுத்த முடியும். இயந்திரத்தின் மற்றொறு பகுதியில் பயிர் நடவுபணியை செய்யும் இணைப்பு கருவி உள்ளது. இந்த இயந்திரம் மூலம் மானாவாரி பயிர் நிலங்களை செம்மைபடுத்தி பயிர் விதைகளை நடவு செய்யமுடியும். இதன் மூலம் பணி வேகமாக நடைபெறுவதுடன் பணியாளர் தேவையும் குறையும் என்றனர். சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் திவ்யா மற்றும் பிஇ மாணவி சாரிகா ஆகியோர் நவீன ரத்தப் பரிசோதனை கருவியை உருவாக்கியுள்ளனர். இதில் அமைக்கபட்டுள்ள ஒரு குழாயின் வெளிப்பகுதியில் வாய் காற்று மூலம் வேகமாக ஊதினால் இக்கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி மற்றும் கைபேசி போன்ற கருவியில் சர்க்கரை அளவீட்டையும் வாயில் உள்ள துர்வாடை அளவையும் காட்டுகிறது. சர்க்கரை அளவானது குறிப்பிட்ட எண்ணில் வருகிறது.

அந்த எண்ணைக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரின் சர்க்கரை அளவு எந்த விகித்தில் இருக்கிறது என்பதை அறிய முடியும். வீட்டில் இருப்பவர்கள், முதியவர்கள் அடிக்கடி ஊசி போட்டு சர்க்கரை அளவை கணக்கிடுவதில் உள்ள குறைகள் இதில் இருக்காது. ஊதினால் மட்டும் போதும் சர்க்கரை அளவுடன் வாயின் பராமரிப்பும் தெரியவருகிறது. இந்த கருவியை 4 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உயர் தொழில்நுட்பத்துறை மாணவிகள் அத்துறை பேராசிரியர் சுதாகர் உதவியுடன் மவுத் வாஷ் (வாயை சுத்தப்படுத்தும் திரவம்) கண்டுபிடித்துள்ளனர். இதனை வெளியில் பல நிறுவனங்கள் விறகும் விலையை விட குறைந்த விலையில் தயாரிக்கலாம். அரை லிட்டர் ரூ.50க்குள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்த மவுத் வாஸ் மூலம் ஒரு குப்பி அளவு பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்கு வாய் மனம் இருக்கும் எனவும் அவரகள் கூறினர்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவிகள் அஸ்வதி, தேவ மனோஜா ஆகியோர் தங்கள் ஆசிரியை ஜெய அனிதா வழிகாட்டுதலுடன் நீர் நிலைகளில் படிந்துள்ள மாசு பொருட்களை அகற்றும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மூலம் நீர் நிலைகளில் மிதக்கும் மக்காத குப்பைகளையும் சுலபமாக அகற்ற முடியும். இதனை படகு போன்ற வடிவமைப்பு ஏற்படுத்தி குட்டை மற்றும் அகலமான நீர்நிலை பகுதிக்கும் சென்று கழிவு ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியும் என்றனர். இதுபோல் பல்வேறு ரோபோ கருவிகள், மண்பானை மற்றும் பாட்டில்களில் டிஸ்யு பேப்பர் மூலம் அழகிய வடிவமைப்பு, சிரட்டை துண்டுகளில் அழகிய சிற்பங்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : discoveries ,Nell Science Festival , Nellai, science, discoveries
× RELATED விஞ்ஞானிகள் புதிய கண்டு பிடிப்புகளை...