×

இன்று மீண்டும் கெத்தா ஸ்டைலா கிராமத்தில் வலம்வரும் சின்னத்தம்பி யானை

பெ.நா.பாளையம்: கோவையில் வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் திரும்பியுள்ளது. சின்னத்தம்பி மீண்டும் திரும்பியதால் விளைநிலங்களை சேதப்படும் என்ற அச்சம் விவசாயிகள், மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை அடுத்த ஆனைகட்டி, சின்னதடாகம், மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் கடந்த சில மாதங்களாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. குறிப்பாக விநாயகா, சின்னத்தம்பி என்ற இரண்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன.

ஜோடியாக சுற்றித்திரியும் இந்த யானைகளில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி விநாயகாவை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அந்த யானை முதுமலை வனத்தில் விடுவிடுத்தனர். இந்நிலையில், சின்னத்தம்பியை பிடிக்க முதுமலை, கலீம் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. இதனைதொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், அசோகன், விஜயராகவன், கவிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 25-ம் தேதி 4 மணிக்கு சோமையனூர் மலை அடிவார பகுதியில் முகாமிட்டனர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சின்னத்தம்பி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

அப்போது, தாய் மற்றும் குட்டியுடன் உள்ள யானைகளுடன் சின்னத்தம்பி சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் தாய், குட்டி யானையை பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர். இதனை தொடர்ந்து 2 யானைகளும் சின்னத்தம்பியை விட்டு பிரிந்து வனத்துக்குள் சென்றது. அதன்பின், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி யானையை மயங்க செய்தனர். இதையடுத்து, 2 கும்கிகள் உதவியுடன் சின்னத்தம்பி கழுத்தில் கயிறு கட்டி, ரேடியோ காலர் பொருத்தி 2 ஜேசிபி உதவியுடன் லாரியில் ஏற்றினர். லாரியில் சின்னதம்பியை கும்கி விஜய் உதவியுடன் ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, சின்னதம்பி லாரியில் ஏற அடம் பிடித்தது.

அருகில் இருந்த பொக்லைன் வாகனத்தை கீழே தள்ளிவிட பார்த்தது. அப்போது, கும்கி விஜய் தன் தந்தத்தால் ஆக்ரோஷமாக சின்னதம்பியின் பின் பகுதியை தாக்கியது. இதில், சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. மேலும் தந்தம் உடைந்து, ரத்த காயங்களோடு சின்னதம்பியை வனத்துறையினர் பிடித்துச்சென்றது காண்போரை கலங்கச்செய்தது. இந்நிலையில், சின்னதம்பியை தேடும் வகையில் பெண் யானையும், அதன் குட்டியும் சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். பின்னர் பட்டாசுகளை வெடித்து சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். இந்நிலையில் இன்று மறுபடியும் வானத்திலிருந்து கிராமங்களை நோக்கி சின்னத்தம்பி வந்துள்ளான். இன்று சாலையூர் பகுதியில் சின்னத்தம்பி வலம் வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. இன்றும் யானையை பட்டாசுகள் வெடித்து வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathampi ,village ,Keta Stila , Chinnathampi elephant,village,forest department
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...