×

தெலங்கானாவில் பரபரப்பு : பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து

திருமலை: தெலங்கானாவில் தனியார் சார்பில் நடந்த பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 300 கடைகள் எரிந்து நாசமானது. ₹40 கோடி பொருட்கள் சேதம் அடைந்தது. விபத்தை பார்த்த பொதுமக்கள் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.தெலங்கானா தலைநகர் ஐதராபாத் நாம்பல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை தனியார் நடத்தும் பொருட்காட்சி  நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் கடந்த 1ம் தேதி பொருட்காட்சி தொடங்கியது. இங்கு தனியார் நிறுவனங்கள், வங்கிகள் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாலையும் பொருட்காட்சியை காண சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அப்போது இரவு 8.30 மணியளவில் அங்கிருந்த ஒரு அரங்கம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீ மளமளவென மற்ற அரங்குகளுக்கும் பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் கீழே விழுந்தனர். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.தகவலறிந்த நாம்பல்லி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராடி நள்ளிரவு 12.30 மணிக்கு தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் எரிந்து சாம்பலானது. விபத்தில் சுமார் ₹40 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

மேலும் புகையில் சிக்கி மயக்கம் அடைந்த  ராஜ்குமார்(45), சில்வர் உசேன்(50) ஆகியோர்  உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஐதராபாத் மேயர் ராம்மோகன் கூறுகையில், `மகேஷ் பன்சானி என்ற கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 10 நிமிடத்திற்குள் தீ பரவி 300க்கும் மேற்பட்ட கடைகள் நாசமானது. பெரிய மைதானமான இங்கு தீ விபத்து ஏற்பட்டது துரதிஷ்டவசமானது. மனித தவறால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். பொருட்காட்சியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Telangana ,fire ,exhibition , Exhibition, terrible fire accident, flow
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...