×

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: மேலும் 2 பேர் துபாயிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டனர்

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் தரகர் ஒருவரும் துபாயிலிருந்து நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டனர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி லஞ்சம் கைமாறியது தெரியவந்ததையடுத்து, இது ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த தரகர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் ஏற்கனவே துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த வழக்கில் ₹3,600 கோடி நிதி மோசடி தொடர்பாக துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜிவ் சம்ஷேர் பகதூர் சக்சேனா என்பவரையும், ₹90 கோடி முறைகேடு தொடர்பாக தீபக் தல்வார் என்ற புரோக்கரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வந்தது. இவர்களை பிடித்து தரும்படி துபாய் அதிகாரிகளிடம் இந்தியா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களை நேற்று முன்தினம் பிடித்த துபாய் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.  இவர்கள் இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சக்சேனாவை 8 நாள் காவலில் அனுப்ப அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது. அவருக்கு புற்றுநோய் இருப்பதாக அவரது வக்கீல் கூறியதால், 4 நாள் காவலில் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. தீபக் தல்வாரை 14 நாள் காவலில் அனுப்ப வேண்டும் என அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது. சக்சேனாவை இந்தியா கொண்டுவர நாடு கடத்துவதற்கான எந்த நடைமுறையையும் துபாயில் மேற்கொள்ளப்படவில்லை. அவரை இந்தியா கொண்டு வரும்போது குடும்பத்தினர், வக்கீல்களை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை என அவரது வக்கீல் குற்றம்சாட்டியுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் வழங்கிய 58 மில்லியன் யூரோ லஞ்ச (₹473 கோடி) பணம் துபாயில் உள்ள சக்சேனாவின் பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VVIP ,India ,Dubai , VVIP helicopter scam, Augusta Westland, Dubai, India
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...