×

போதிய மழையில்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு : திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் மக்கள் அவதி

திருச்சுழி: திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் போதிய மழையில்லாமல் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் உப்புநீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்லப்பட்டுள்ளனர். நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் 84 ஊராட்சிகளில் 350க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருச்சுழி பகுதியில் தும்முசின்னம்பட்டி, சலுக்குவார்பட்டி, சாத்திசேரி, எஸ்.வல்லக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வரும் தண்ணீர் உப்புத்தன்மையுடன் உள்ளது. வத்தாப்பேட்டை புதூரில் போர்வெல் அமைத்து ஆண்டியந்தல், எஸ்.வல்லக்குளம், சாத்திசேரி வழியாக வேளாநேரி வரை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீரும் குடுக்க முடியாத நிலையில் உள்ளது.

திருப்பாச்சேத்தி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கொட்டக்காச்சியேந்தல், இருஞ்சிறை, கணையமறித்தான் உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. ஆனால், இந்தத் தண்ணீர் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. கொட்டாக்காச்சியேந்தல், கணையமறித்தான் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல், கண்மாய், கிணற்று நீரை குடிக்கின்றனர். இதனால், குடிநீரை ரூ.12க்கு விலைக்கு வாங்குகின்றனர். உமையான் ஆலங்குளம், ரெகுநாதமடை ஊராட்சி குழலிகுளம் கிராம மக்கள் அருகில் உள்ள கானல்ஓடையில் ஊற்று நீர் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

குழலிகுளம் கிராமத்திற்கு என மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதை புழக்கத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. இக்கிராம மக்கள் மூன்று கி.மீ., தூரம் நடந்து சென்று கானல் ஓடையில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நரிக்குடி ஒன்றியம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நரிக்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது மழை இல்லாததால் நிலத்தடிநீர் குறைந்துவிட்டது. உப்புத் தண்ணீருக்கு கூட வழியில்லை. தாமிரபரணி குடிநீர் பற்றாக்குறையாக வருகிறது. எனவே, தாமிரபரணி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchuri , Drinking water, Tiruchuri, Narikudi, people
× RELATED திருச்சுழி விவசாயிகள் கோரிக்கை பட்டாசு பதுக்கல்: 4 பேர் கைது