×

தொடர்ந்து தண்ணீர் திறப்பால் ஆழியார் அணையில் நீர்மட்டம் குறைந்தது : 71 அடியாக சரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, தொடர்ந்து தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் 71அடியாக சரிந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மொத்தம் 120அடி கொண்ட ஆழியார் அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கும், கேரள மாநில பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கடந்த ஆண்டில் ஜூன் முதல் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குறிப்பிட்ட நாட்களில் அணையின் முழு அடியையும் தொட்டது.  இதையடுத்து நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை சிலநாட்கள் மட்டுமே பெய்தது.

அதன்பின், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது.
இதன் காரணமாக,  ஆழியார் அணையின் நீர்மட்டம் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் 100அடியாக சரிந்தது. இந்நிலையில் ஆழியார் அணையிலிருந்து ஆயக்கட்டு பாசன பகுதி மற்றும் கேரள பகுதிக்கும், இந்த மாதத்தில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனபகுதிகளுக்கும், கேரள பகுதி மற்றும் வழியோக கிராம பகுதி குடிநீர் தேவைக்கும் என வினாடிக்கு 750கனஅடி தண்ணீர் திறப்பு தொடர்ந்திருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 100கனஅடியாக இருந்தாலும், தொடர்ந்து தண்ணீர் திறப்பால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீர்மட்டம் கிடுகிடு என்று குறைந்தது. இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71அடியாக சரிந்தது. நாளுக்குநாள் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் கரையோரத்தில் உள்ள மணல்மேடுகள் வெளியே தெரிந்தவாறு உள்ளது. இனி வரும் காலங்களில், அணையில் தண்ணீரை சேமித்தால்தான் கோடைக்காலத்தின்போது, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Aliyar , Water, deep water, water level
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்