×

மேட்டூர்-மைசூரு சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதி : மாலை 6 மணிக்கு மேல் போக்குவரத்து துண்டிப்பு

மேட்டூர்: தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் தாராளமாக சுற்றித்திரிந்த பகுதி. பாலாற்றில் இருந்து தான் சந்தன கடத்தல் வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம், ஆத்தூர், மாறுகொட்டாய், ஜம்பூருட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர முடியும். மாறுகொட்டாய் வரை ஒரே ஒரு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. மேலும், அங்குள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். கிராம மக்கள் இருசக்கர வாகனங்களில் சேலம் மாவட்டம் கொளத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிக்கு பல்வேறு தேவைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், தமிழககர்நாடக எல்லை வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சி தலைதூக்கியுள்ளது.

இதனால், வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. மரங்களிலும் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. காய்ந்த இலை தழைகளை சாப்பிடும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் போதிய தண்ணீர் இன்றி தவிப்பிற்குள்ளாகி வருகின்றன. இதையடுத்து, பசுந்தலைகள் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் உள்ள யானை உள்ளிட்ட வனவிலங்குகள் காவிரி மற்றும் பாலாறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. கடந்த 26ம் தேதி மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏமனூர் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காவிரி ஆற்றங்கரையோரமாக வந்த பெண் யானை ஒன்று அங்கு கிடைத்த ராகி உள்ளிட்ட பயிர்களை வயிறுமுட்ட சாப்பிட்டதில் போதிய தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்தது. இதில், அதன் வயிற்றில் இருந்த குட்டியும் பலியானது. அவ்வாறு வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், மேட்டூர்மைசூரு சாலையை சர்வ சாதாரணமாக கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

பாலாற்றில் இருந்து கோபிநத்தம் செல்லும் சாலையிலும் யானைகள் நடுரோட்டிலேயே நின்று விடுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வாகனங்களை யானைகள் வழிமறிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால், மாலை 6 மணிக்கு மேல் கோபிநத்தம் ஜம்பூருட்டு, ஆத்தூர் மற்றும் மாறுகொட்டாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லவும், கார் மற்றும் வேன்களில் செல்வதற்கும் கர்நாடக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், மாலை நேரங்களில் பாலாறு வனப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. காட்டில் கிடைக்கும் காய்ந்த இலை தழைகளை சாப்பிடும் வனவிலங்குகளின் தாக சாந்திக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Motorists ,road ,Mettur-Mysore , Mysore, elephants, motorists
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி