×

ஆதரவாளர்கள் புடைசூழ பழைய மடாதிபதி தாக்குதல் குடந்தை மடத்தில் நள்ளிரவில் பயங்கர அடிதடி

* பட்டாபிஷேகம் முடிந்த 12 மணிநேரத்தில் புதிய மடாதிபதி ஓட்டம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமககுளம் அருகே வீரசைவ பெரிய மடம்   உள்ளது. மடத்தின் 97-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க  தேசிகேந்திர சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார். அவர் கடந்த ஒரு  மாதத்திற்கு முன் தலைமறைவாகி விட்டார். அதைத்தொடர்ந்து, மடத்தின் உறுப்பினர்கள் 20  பேர்  கொண்ட நிர்வாக குழு சிறப்பு கூட்டம்  நடத்தி கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மடத்தை சேர்ந்த ஸ்ரீ பசவ முருக சாரங்க  தேசிகேந்திர சுவாமிகளை மடாதிபதியாக தேர்வு  செய்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை மடத்தில் முருக சாரங்க தேசிகேந்திர சுவாமிகளுக்கு    சித்ரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக  சாராணாரூ பீடாதிபதி ஸ்ரீ முருக ராஜேந்திர சுவாமிகள் பட்டாபிஷேகம் செய்து  வைத்தார். பட்டாபிஷேகம் நடந்ததை அறிந்த, நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் தனது ஆதரவாளர்கள் 30 பேருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு மடத்துக்குள்  அதிரடியாக புகுந்தார். அதிஷ்டானம் பகுதிக்கு நேரடியாக சென்றார். இங்குதான்  பிரதான மடாதிபதி தங்கும் அறை உள்ளது. அந்த கதவை தட்டிப்பார்த்தனர். கதவு  திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, நீலகண்ட சுவாமிகளுடன் வந்திருந்த 30 பேர், மடத்தில் கிடந்த  கட்டைகளை எடுத்துக்கொண்டு கண்ணாடி கதவுகளை அடித்து சேதப்படுத்தினர். அப்போது, புதிய மடாதிபதியின் ஆதரவாளர்கள் பல்வேறு  அறைகளில் இருந்து ஓடி வந்தனர். அவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால், தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர். இந்த களேபரத்தில் புதிய மடாதிபதியும் தப்பிவிட்டார். பகல் 12 மணிக்கு  பட்டாபிஷேகம் நடந்த புதிய மடாதிபதி நள்ளிரவில் 12 மணிக்கு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கும்பகோணம் மேற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நீலகண்ட சுவாமிகள், போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார்.

பின்னர், இரவு முழுவதும்  மடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நீலகண்ட சாரங்க  மடாதிபதி தனது ஆசனத்தில் போய் அமர்ந்தார். தானே தொடர்ந்து மடாதிபதியாக  இருப்பதாகவும் கூறினார். இந்த அடிதடி சம்பவத்தில் படுகாயமடைந்த ஸ்ரீ பசவ  முருகசாரங்க தேசிகேந்திர சுவாமி (30), பசவ நிரஞ்சன்சுவாமி (29), பசவ  பிரபு (18) ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில், நீலகண்ட சுவாமிகள்  புகார் ஒன்று அளித்தார். அதில், நான் ஊரில் இல்லாத நேரத்தில் மடத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து, அங்கிருந்த 5 கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதேபோல் புதிய மடாதிபதி ஸ்ரீ பசவ முருகசாரங்க சுவாமி கொடுத்த புகாரில், ‘‘தன்னையும், தனது ஆதரவாளர்களையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இதையடுத்து, முருக சாரங்க சுவாமி கொடுத்த புகாரின்பேரில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி (43), நகர செயலாளர் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நானே மடாதிபதி: நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது: நானே மடாதிபதியாக இருக்கிறேன். மடத்தின்  நிர்வாக குழுவை கலைக்கவோ,  புதிய நிர்வாகிகளை நியமிக்கவோ எனக்கு முழு அதிகாரம் உள்ளது.  தற்போதைய நிர்வாக குழுவை கலைத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

‘பல கோடி சொத்து அபகரிப்பு’
கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தின் நிர்வாக குழு  உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பழனியப்பன் ஆகியோர் கூறும்போது, `பழமையான வீரசைவ பெரிய மடத்தில் கங்காதரன் என்பவர் 2012ம் ஆண்டு சமையல்காரராக வந்தார். பின்னர், அவர் தன்னை இளைய மடாதிபதியாக அறிவித்து கொண்டார். கடந்த 2016ம் ஆண்டு, கங்காதர சுவாமிகள், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார். மேலும், கங்காதர சுவாமிகள் மடத்தின் சொத்துக்களை கைமாற்றியதில் நீலகண்ட சுவாமியும் பல கோடி பணம் பெற்று  கொண்டது தெரியவந்தது. ஒரு மாதத்திற்கு முன் திடீரென நீலகண்ட சுவாமி தலைமறைவானார். இதையடுத்து, நீலகண்ட சுவாமிகளை நீக்கி விட்டு, தற்போது ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளை  மடாதிபதியாக நியமனம் செய்துள்ளோம்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sponsors , The supporters are flanked by an old boss attack At night in the monastery is a terrible blow
× RELATED இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி