×

வீடு, குடோனில் விற்பனைக்கு பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல்: வியாபாரி உள்பட 4 பேர் கைது

ஆவடி: அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதியில் வீடு, குடோனில் பதுக்கிய 1 டன் குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மளிகைக்கடை வியாபாரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, அம்பத்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் தனிப்படையை சேர்ந்த சப்.இன்ஸ்பெக்டர்கள் பிரதீப், இளங்கோ தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவடி அயப்பாக்கம், பவானி நகர், எம்ஜிஆர் தெருவில் தேன்ராஜ் (36) என்பவரது வீட்டில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அட்டை பெட்டிகளில் 350 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அயப்பாக்கம், ஐயப்ப நகரில் தேன்ராஜ், மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர், வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து தினமும் கடைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருவது தெரியவந்தது.  எனவே தனிப்படை போலீசார் தேன்ராஜை பிடித்து  திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதுரை  வழக்குப்பதிவு செய்து மளிகைக்கடை வியாபாரி தேன்ராஜை கைது செய்தார். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் நேற்று மதியம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

அதேபோல் அம்பத்தூர், ராமாபுரம், பெரியார் தெருவில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று முன்தினம் இரவு வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று குடோனை சோதனை செய்தபோது 650 கிலோ  குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோன் உரிமையாளரான அதே பகுதி பாலாஜி தெருவை சேர்ந்த அப்பாஸ் (36), அவருக்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் கோயம்புத்தூர் மாவட்டம்,

உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சூரியபிரகாசம் (23) மற்றும் நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் (25) ஆகியோரை பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தார். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கோயம்புத்தூரை சேர்ந்த கண்மணி என்பவரை தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்த மூவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் நேற்று மதியம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudgas , House, guton, gutkas confiscation, businessman, four arrested
× RELATED வீடு, குடோனில் விற்பனைக்கு பதுக்கிய 1...