×

குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூன்று பேர் 3வது முறையாக ஜாமீன் கோரி மனு

சென்னை: குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூன்று பேர் 3வது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய தமிழகத்தை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், மத்திய அரசு அதிகாரிகள் என பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அனைவரும், தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி சென்னை, சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மூவரும் 3வது முறையாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கைதாகி 90 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாகிவிட்டதாகவும், இனி வரும் வழக்கு விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த மனு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டார்.  




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madhav Rao , Gudkah scam, Madhavrao, bail
× RELATED குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட...