×

சிறுமியை துன்புறுத்திய விவகாரம்: நடிகை பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலத்துறை பரிந்துரை

ஆந்திரா: சிறுமியை துன்புறுத்திய விவகாரத்தில், நடிகை பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு அம்மாநில குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை பானுபிரியாவின் வீட்டில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்துவதாகவும், சம்பளம் கொடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும் நடிகை பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் இருவர் மீதும் அச்சிறுமியின் தாயார் புகாரளித்தார். அதுமட்டுமல்லாது, பானுபிரியாவின் அண்ணனால் பாலியல் தொல்லைக்கு தனது மகள் ஆளாகியுள்ளார் எனவும், தன் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்து விரட்டிவிட்டதாகவும் பிரபாவதி என்ற அந்தப் பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சாமல்கோடா போலீசார் நடிகை பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பானுபிரியாவின் வீட்டில் இருந்த சிறுமியை கடந்த சனிக்கிழமை அன்று குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் 14 வயதில் வீட்டில் பணியில் அமர்த்தி கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலக் குழுமம் விசாரணைக்கு பின் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 வயதில் பணிக்கு அனுப்பிய சிறுமியின் தாயார் பிரபாவதியை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Banubriya ,Child Welfare Department , Servant girl, actress Banubriya, children's welfare department
× RELATED நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலத்துறை பரிந்துரை