×

சண்முகாநதி அணையில் நீர் குறைவால் மீன் திருட்டு அதிகரிப்பு : மீன்வளத்துறை அதிகாரிகள் மெத்தனம்

உத்தமபாளையம்: சண்முகாநதி அணையில் நீர்மட்டம் குறைவினால் மீன் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். ராயப்பன்பட்டி அருகே சண்முகாநதி அணை உள்ளது. 52.5 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு ஹைவேவிஸ் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்யக்கூடிய மழையினால் நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, கன்னிசேர்வைபட்டி, ஆனைமலையன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதுண்டு. இதனால் குளங்கள், கண்மாய்களின் நீர்மட்டம் உயரும்.

பலஆயிரம் ஏக்கர் பயன்பெறக்கூடிய விவசாய நிலங்களின் தோட்டக்கிணறுகளில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு காய்கறி, தென்னை, வாழை விவசாயங்கள் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகும். இந்நிலையில்  போதிய மழை இல்லாததால்  சண்முகாநதி அணை நீர்மட்டம் சரசரவென குறைந்து தற்போது 26.25 அடியாகி குளம்போல் காட்சியளிக்கிறது. இதில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. மீன்களை ஏலம் விடும் மீன்வளத்துறை அதிகாரிகள் இங்கு வருவதே இல்லை. இதனால் மீன்களை இரவு முதல் பகல் வரை அதிகளவில் பிடிப்பது அதிகரித்து வருகிறது. மீன்களை திருட்டுதனமாக பிடிப்பதற்கென்றே கும்பல்கள் உள்ளன. இவர்கள் மீன்வள அதிகாரிகளை ஏமாற்றுகின்றனர். அதிகாரிகளும் சண்முகாநதி அணையின் பக்கமே வராமல் இருப்பது இவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதால் மீன் திருட்டை எந்தவிதமான தடையும் இல்லாமல் செய்கின்றனர்.

பெயரளவில் செயல்படும் மீன்வளத்துறை

மாவட்டத்தில் பல குளங்கள், கண்மாய்கள், அணைகளில் மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. மழை அதிகமாக பெய்யும்போது வளர்க்கப்படும் மீன்கள் கோடை தொடங்கும்போது வற்றினால் இதில் இருந்து அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதனை கண்காணித்து நிர்ணயம் செய்யவேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டியைவிட்டு எங்கும் செல்வதில்லை. இதனால் அதிகளவில் மீன்கள் கொள்ளையடித்து தனியார்கள் லாபம் பார்க்கின்றனர். அதிகாரிகளும் வாங்குவதை வாங்கி கொண்டு எதனையும் கண்டு கொள்ளாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water fall ,dam ,Shanmuganadi ,Fisheries Officers , Shanmuganathi Dam, Fish, Fisheries Department
× RELATED வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது