×

அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு!

ராலே: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தினர் ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிக்க கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுள்ள கரோலினா மாநில அரசு நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆணையை அம்மாநில ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். அதில், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக அனுசரிக்கப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டு ராய் கூப்பர், வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள், மாநிலத்தின் பன்முக கலாச்சாரத்திற்கு பெருமளவில் பங்காற்றியுள்ளார்கள் என கூறியுள்ளார். மேலும், உலகில் நெடுங்காலமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் பெருமையைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள், தமிழ்ப்பள்ளிகள் அமைத்து இளைய தலைமுறையினருக்கு எழுதப் படிக்கை வைத்து, வருங்காலத்தில் பல தலைமுறை தாண்டியும் தமிழ் மொழியையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள். அது பல வழிகளிலும் நமது மாநிலத்தின் சமூக பொருளாதார, கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. அதன்படி தமிழர்களோடு இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். மாநிலத்தின் அனைத்து குடிமக்களும் இதனை அனுசரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Carolina ,US State , USA, North Carolina, Tamil Language, Cultural Month, January, Roy Cooper
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்