×

சென்னை டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி!

சென்னை : சென்னை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது. தினமும் 45,000 முதல் 55,000 பேர் வரை பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கான முதல் வழித்தட திட்டத்தின் இறுதியாக டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கி.மீ தூரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர்நீதிமன்றம், மண்ணடி ஆகிய 6 ரயில் நிலையங்கள் வருகின்றன. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்தின்போது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். ரயில் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரம் விளக்கு, எல்ஐசி ஆகிய நிறுத்தங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் மெட்ரோ ரயில் இயக்க அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டதையடுத்து டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார். பிப்., 2ம் வாரத்தில் இந்த புதிய வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Metro , Chennai,DMS-Washermanpet,Metro train,Railway Safety Commissioner
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...