×

ராணிப்பேட்டையில் நள்ளிரவில் பரபரப்பு: வீட்டில் தூங்கி கொண்டிருந்த தலைமை ஆசிரியை கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த தலைமை ஆசிரியை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து  ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். 9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் போராட்டம்  மற்றும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஆசிரியர்கள், முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில்,  வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த சரவணன்(44), வாலாஜா அடுத்த ஒழுகூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை  ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஜினி(43), மேல்பாடி ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார்.

மேலும், சரவணன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சோளிங்கர் வட்டார செயலாளராகவும், அவரது மனைவி ரஜினி துணை செயலாளராகவும்  உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ராணிப்பேட்டை போலீசார்,  தலைமை ஆசிரியை ரஜினியின் வீட்டிற்கு  சென்றனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்து சென்றனர். பின்னர் அவரை போலீசார்  கைது செய்தனர். இதுகுறித்து, தகவலறிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று  காலை ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு போலீசாரிடம்,  ‘எவ்வித காரணமுமின்றி எதற்காக தலைமை ஆசிரியை  ரஜினியை கைது செய்தீர்கள். அவரை விடுவியுங்கள்’ எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து இன்ஸ்பெக்டர்கள்(பொறுப்பு) இலக்குவன், திருநாவுக்கரசு(வாலாஜா) மற்றும் போலீசார் அங்கு வந்து ஆசிரியர்களிடம், ‘புகார் தொடர்பாக  மேலிட உத்தரவின்படி நாங்கள் கைது செய்தோம். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என தெரிவித்தனர். இதை ஆசிரியர்கள் ஏற்காமல்,  போலீஸ் நிலைய நுழைவாயிலில் நின்று கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, பகல் 11.45 மணிக்கு தலைமை ஆசிரியை  ரஜினியை போலீசார் விடுவித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chief editor ,Ranipettai ,house , Ranipettai, the chief editor arrested
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்