×

ஆறுமுகசாமி ஆணையம் 5வது முறையாக சம்மன் பிப். 5ல் ஆஜராகும் துணை முதல்வர் ஓபிஎஸ் மூலம் உண்மை வெளியாகுமா?: வளாகத்துக்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு மனு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 5ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் நேற்று 5வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக கடந்த டிசம்பர் 19ம் தேதி, ஜனவரி 9, ஜனவரி 23ம் தேதி ஆணையம் சார்பில், ஆஜராக மூன்று முறை சம்மன் அனுப்பபட்டது. ஆனால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி 29ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 25ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தை தரவேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இம்மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அந்த மனுவை திரும்ப பெற்று கொண்டார். இந்த நிலையில் அப்போலோ சார்பில், மருத்துவக்குழு அமைப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்பதால், நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நடத்த வேண்டிய விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 5வது முறையாக பிப்ரவரி 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவிருப்பதால், பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் ஆணையம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி அவர் ஆஜராவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஆஜராகி ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பார் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் முக்கிய காரணம். அவர் தான் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியவர். எனவே அவரது வாக்குமூலம் விசாரணை ஆணையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. ஆணையம் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தோடு விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், மூத்த அமைச்சர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்பட பலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆணையத்தில் அவர் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். இதனால், ஆணையம் பிப்ரவரி 24ம் தேதிக்குள் முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மேலும், 3 மாத கால அவகாசம் கேட்கப்படுமா என்பது பிப்ரவரி 5ம் தேதி தெரியும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arumugamasi Commission ,Will Vice-Premier's , Arumugasamy Commission, Deputy Chief Minister OPS,DGP,
× RELATED ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை...