முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். சமதா கட்சியை தோற்றுவித்து, பின்னர் ஜனதா தள் கட்சியில் பல முக்கிய பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் மறைவு இந்தியாவிற்கே ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்து, அதில் இந்திய அரசு வெற்றி பெற்றது. கட்சி கொள்கை ரீதியாக எவ்வளவு மாறுபாடு கொண்டிருந்தாலும் அவரின் நாட்டுப்பற்றை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ராமதாஸ் (பாமக நிறுவனர்): இந்திய அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராளித் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தொழிற்சங்கவாதியாக உருவெடுத்த பெர்னாண்டஸ் அப்போதைய மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில் தலைமறைவாக இருந்தபடியே அவர் நடத்திய சாகசங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். ஜார்ஜ் பெர்னாண்டசின் மறைவு சோசலிசக் கொள்கைகளுக்கும், சோசலிச அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரது மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது. வைகோ(மதிமுக பொதுச் செயலாளர்): அனைத்து  நாடுகள் சோசலிச அமைப்பின் நிர்வாகியாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.  இந்திய நாட்டின் வரலாற்றையே உலுக்கிய 1974 ரயில்வே தொழிலாளர் வேலை  நிறுத்தத்தை தலைமை தாங்கி நடத்தினார். பலமுறை காவல்துறை அடக்குமுறைக்கு  ஆளாகி தாக்கப்பட்டார். வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக  புலிகளுக்கு அவர் கவசமாகத் திகழ்ந்து செய்த உதவிகளை எண்ணும்போதே என்  கண்களில் கண்ணீர் வடிகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கும்,  தோழர்களுக்கும் மதிமுக, சார்பில் ஈழத் தமிழர்கள் சார்பில் வீரவணக்கத்தைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்த செய்தி மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. மேலும் (புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: