×

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார் : லோதி மயானத்தில் இன்று உடல் தகனம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவரும், முன்னாள் தொழில்துறை, ரயில்வே துறை அமைச்சருமான மூத்த தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. மூத்த சோசலிச தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ், கடந்த 2010ம் ஆண்டில் வயது மூப்பு, உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகினார். அதன்பின் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. டெல்லியில் அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த பெர்னாண்டஸ் நேற்று காலை 7 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88.

1930ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பெர்னாண்டஸ், தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளராக இருந்தார். புரட்சிகர எண்ணம் கொண்ட அவர், தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

1967ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்தார். 1975ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தார். இதனால், கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.நெருக்கடி நிலைக்குப் பிறகு, 1977ல் இந்திரா காந்தி தோல்வியைத் தழுவி ஜனதா கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற மொரார்ஜி தேசாய் அரசில் மத்திய தொழில் துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். பின்னர், 1998ம் ஆண்டு முதல் 2004 வரையிலான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1994ல் சமதா கட்சியை தொடங்கிய பெர்னாண்டஸ், பாஜவுடன் நெருக்கம் காட்டி வந்தார். 2003ல் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார். பாதுகாப்பு அமைச்சரவைத் தவிர 1989 முதல் 1990 வரை ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார்.  கடந்த 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் வென்று மொத்தம் ஒன்பது முறை எம்பியாக இருந்துள்ளார்.

கடந்த 2009ல் அல்சைமர் நோய் தாக்கியதால் இவருக்கு பீகார் மாநிலம் முசார்பூர் தொகுதியில் சீட் தர ஐக்கிய ஜனதா தளம் மறுத்து விட்டது. இதனால், சுயேட்சையாக போட்டியிட்ட பெர்னாண்டஸ் தோல்வி அடைந்தார். ஆனாலும், 2009 முதல் 2010ம் ஆண்டு வரை அவர் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்தார். அதன்பின் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார் பெர்னாண்டஸ்.நேற்று காலமான பெர்னாண்டசின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. பெர்ணான்டசின் கடைசி கால விருப்பப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. டெல்லி லோதி மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டு, அஸ்தி மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்
பிரதமர் மோடி டிவிட்டரில் தனது இரங்கல் செய்தியில், ‘‘வெளிப்படையான, பயமற்ற,தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாட்டிற்காக மதிப்புமிக்க பங்களிப்பை தந்தவர். தனது கொள்கையில் இருந்து சற்றும் விலகாதவர்’’ என கூறி உள்ளார்.
ராகுல் தனது பேஸ்புக் பதிவில், ‘‘முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் மறைவு வருத்தமளிக்கிறது’’ என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில், ‘‘ஜார்ஜ் பெர்னாண்டசின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

கோககோலாவை எதிர்த்தவர்
1977ல் மத்திய தொழில் துறை அமைச்சராக பெர்னாண்டஸ் இருந்த போது, பெரா (வெளிநாட்டு பணபரிவர்த்தனை ஒழுங்குமுறை சட்டம்) சட்டத்தை கடுமையாக்கினார். இதன் காரணமாக, கோககோலா, ஐபிஎம் உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய கிளைகளை மூடின.

கார்கில், பொக்ரான்
வாஜ்பாய் அரசில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது அதை முன்னின்று வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். மேலும் அப்துல்கலாம் துணையுடன், பொக்ரானில் அணுகுண்டு சோதனையையும் பெர்னாண்டஸ் நிகழ்த்திக் காட்டினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : George Fernandes ,Lodhi , George Fernandez, passed away, a former defense minister
× RELATED பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு போலீஸ்காரர் பலி, 4 பேர் காயம்