×

நியூசிலாந்துடன் மகளிர் கிரிக்கெட் : மந்தனா, மித்தாலி விளாசலில் இந்தியா அபார வெற்றி

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து மகளிர் அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது போட்டி பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, நியூசிலாந்து 44.2 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் சாட்டர்த்வெய்ட் அதிகபட்சமாக 71 ரன் (87 பந்து, 9 பவுண்டரி) விளாச, மற்ற வீராங்கனைகள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி 3, ஏக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் தலா 2, ஷிகா பாண்டே 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஸ்மிரிதி மந்தனா இருவரும் துரத்தலை தொடங்கினர். ஜெமிமா டக் அவுட்டாகி வெளியேற இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த தீப்தி ஷர்மா 8 ரன்னில் வெளியேற, இந்தியா 15 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் மந்தனா - கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

இந்தியா 35.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வென்றது. மந்தனா 90 ரன் (83 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), மித்தாலி 63 ரன்னுடன் (111 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. இந்தியா 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் பிப். 1ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,New Zealand ,Mandana ,win ,Mithali , New Zealand, India's Greatest Victory, Women's Team, Mandana, Mithali
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...