×

2020ல் ஆஸி.யில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு

சிட்னி: மகளிர் மற்றும் ஆண்கள் டி20 உலக கோப்பை தொடர்களுக்கான அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஐசிசி சார்பில் மகளிர் மற்றும் ஆண்கள் உலக கோப்பை டி20 போட்டித் தொடர்கள் நடைபெற உள்ளன. இந்த தொடர்களுக்கான அட்டவணை வெளியீட்டு விழா சிட்னியில் நேற்று கோலாகலமாக நடந்தது. ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் 2 உலக கோப்பை டி20 தொடர்களும் நடைபெற உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடர் அடுத்த ஆண்டு பிப். 21ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும். இதில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. 8 அணிகள் பிரதான சுற்றில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நிலையில், 2 அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை அணிகளுடன் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி இடம் பெறும்.

பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடன் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணி பங்கேற்கும். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ள தொடக்க போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இதே மைதானத்தில் மார்ச் 5ம் தேதி 2 அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெறும். இதில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக மோத உள்ளன. தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், 4 அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றன. தகுதிச் சுற்று ஆட்டங்கள் 18ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில் , சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் அக். 24ம் தேதி தொடங்குகின்றன.

ஏ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுடன் தகுதிச் சுற்றில் இருந்து ஏ1, பி2 அணிகள் இடம் பெறும். பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தகுதிச் சுற்றில் இருந்து பி1, ஏ2 அணிகள் பங்கேற்கும்.சிட்னியில் அக். 24ம் தேதி நடக்கும் சூப்பர் 12 தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே நாளில் பெர்த் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. அரை இறுதி ஆட்டங்கள் நவ. 11 (சிட்னி) மற்றும் நவ. 12ல் (அடிலெய்டு) நடக்க உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி மெல்போர்னில் நவ. 15ம் தேதி நடக்க உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC T20 World Cup ,Aisi , World Cup Series, Table Issue, 2020, Australia
× RELATED சால்ட் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் இங்கிலாந்து வெற்றி