×

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய் வழக்கு : மாவட்ட எஸ்.பி ஆஜராக உத்தரவு

மதுரை : தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களில் போராட்டங்களுக்கு அனுமதி கேட்டவர்கள் மற்றும் கொடுக்கப்பட்ட அனுமதிகள் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த மே மாதம் தமிழக அரசு சார்பில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜன., 8ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தூத்துக்குடியில் மீண்டும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் போடுவதாக மோகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். மேலும் கடந்த 3 மாதங்களாக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி போன்றவைக்கு காவல்துறையினர் அனுமதி தராமல் அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் எத்தனை பேர் போராட்டங்களுக்கு அனுமதி கேட்டனர் என்று கேள்வி எழுப்பினர். மேலும் எத்தனை பேருக்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து நாளை நேரில் ஆஜராகி பதிலளிக்க மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protesters ,Thoothukudi , Thoothukudi, Struggle, District SP, High Court Branch, Sterlite Plant
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது