தமிழ் அழியும் மொழி அல்ல :யுனெஸ்கோ கருத்தரங்கில் திருவாசக பாடலை பாடி அமைச்சர் பாண்டியராஜன் புகழாரம்

பாரீஸ் : திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடி தமிழ் அழியும் மொழி அல்ல என்று யுனெஸ்கோ கருத்தரங்கத்தில் அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதத்துடன் பேசினார். சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 19, 569 தாய் மொழிகள் இருப்பதாக அறியப்படுவதாகவும் அவற்றுள் 121 மொழிகள் பழக்கத்தில் இருந்து குறைந்து வருவதாகவும் கூறினார்.

இதனிடையே ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்த அடையாளத்தை கொண்டுள்ளது என்றும் ஒரு மொழி அழிந்தால் நாம் அதன் தனித்த அடையாளங்களை இழந்து விடுவோம் என்றும்  க.பாண்டியராஜன் கூறினார். இதையடுத்து திருவாசத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடிய பின் அவர் கூறியதாவது, திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் கடந்த 1350 ஆண்டுகளாக இதே முறையில் தான் பாடப்பட்டு வருகிறது; தமிழ் மொழி அழிவின் விளிம்பில் இல்லை; தமிழ் அழியும் மொழி அல்ல; உள்நாட்டு மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளது; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>