×

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 6 நாட்களில் 2 அடி குறைந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு நீராதாரமாக அமைந்துள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 23ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, நேரடி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு நீர் இருப்பு இல்லை. எனவே, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 88 ஏரிகளுக்கு மட்டும், வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த 23ம் தேதி நிலவரப்படி, சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில், 96.30 அடியும், அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், 3,235 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருந்தது.

எனவே, சாத்தனூர் அணை குடிநீர் திட்டங்கள், அணை பராமரிப்பு, நீர் ஆவியாதல், மண் தூர்வினால் ஏற்பட்டுள்ள நீர் இழப்பு போன்றவற்றை கணக்கிட்டு, மீதமுள்ள தண்ணீர் மட்டும் தற்போது பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாத்தனூர் அணையில் வலதுப்புற கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடியும் கடந்த 6 நாட்களாக தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. அதன்மூலம், தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள ஒருசில ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், தொடர்ந்து 6 நாட்களாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால், நீர்மட்டம் குறைய தொடங்கியிருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 94.90 அடியாகவும், நீர் கொள்ளளவு 3,056 மில்லியன் கன அடியாகவும் குறைந்திருக்கிறது. மேலும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதிக்கு, அடுத்த வாரம் முதல் தவணை தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, 200 மில்லியன் கன அடி தண்ணீர் முதல் தவணையில் திறக்க உள்ளனர். அதன்மூலம், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 2,500 ஏக்கர் பயன்பெறும். இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 350 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, அணையில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் 2 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water opening ,Satanur , Water, Sathanur dam, water level
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவர் பலி