×

சுயவிளம்பரத்துக்காக வைகோ பிரதமருக்கு எதிராக போராட்டம்: தமிழிசை தாக்கு

சென்னை: பிரதமருக்கு எதிராக நடத்திய கருப்பு கொடி போராட்டம் வைகோ தனது சுயவிளம்பரத்துக்காக நடத்தியது என்று தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    
 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த பிரதமருக்கு  கருப்புகொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மதுரையில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம், சாலை மறியல் நடத்தியுள்ளனர். நாட்டின் பிரதமரை தரக்குறைவாக ஏசியும், பேசியும் அங்கே கடமை ஆற்ற வந்த காவல்துறை அதிகாரிகளை கண்ணியம் இல்லாமல் ஒருமையில் அழைத்து எச்சரித்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் வைகோ.

 கடமையாற்ற வந்தவர்களை கண்ணியக்குறைவாக பேசுவதுதான் நீங்கள் கூறும் அண்ணா, பெரியாரிடம் கற்றுக்கொண்ட பாடமா?.  ஒப்புக்குகூட தமிழக மக்களை கஜா  புயலின் போது  பார்க்க வரவில்லை என்று கூறும் வைகோ. வடமாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயரங்களை பகிர்ந்து கொண்டார். மத்திய அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பி நிவாரண பணிகளை பிரதமர் அலுவலகம் கண்காணித்தது உதவியது  என்பதே உண்மை. நீங்கள் நடத்திய கருப்பு கொடி  ஆர்ப்பாட்டமும் உங்களை விளம்பரபடுத்தி கொள்ள யாருக்காகவோ ஒப்புக்காக நடத்தியதோ?.

 அரசியலில் கடந்த காலங்களில் கள்ளத்தோணி நாடகம், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர், வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்பது தான் கடந்த கால சாதனை விருதுகள். கருப்பு கோடி போராட்டம் உங்களின் சுய விளம்பரமே தவிர தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காது. பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழக பாஜ  பொறுத்துக் கொள்ளாது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vico , Vaiko, Prime Minister, Struggle, Tamilnadu
× RELATED கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை...