×

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் திறக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியின் போது கூடமேட்டூர் அணையை திறக்கவில்லை

திண்டுக்கல்: ஜெயலலிதா ஆட்சியில் கூட மேட்டூர் அணையை திறக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ என்று ஒளவையார் கூறினார். இன்றைக்கு அந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் வந்த பிறகு, தமிழகத்தில் நல்ல மழை பெய்கிறது. அனைத்து அணைகளிலும் தண்ணீர் நிறைந்து வழிந்தோடுகிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட மேட்டூர் அணையை திறக்க முடியவில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியாறு பெருகி, இன்று நமது ஊர்களுக்கெல்லாம் நீர் கிடைக்கிறது. குக்கர் சின்னத்தை அமமுகவுக்கு வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என்று முன்பு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். தற்போது குக்கர் சின்னம் கூட அவருக்கு இல்லை என்றாகி விட்டது. இரட்டை இலையை முடக்க பார்த்தவருக்கு, குக்கர் சின்னத்தையாவது கொடுங்கள். கழுதை தேய்ந்து, கட்டெறும்பாகி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். ஜெயலலிதா ஆட்சியில் கூட மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘அதிகாரிகள் கமிஷனை எதிர்பார்க்கலாம்’
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பாலப்பணிகள் தாமதமாவதற்கு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கமிஷன் எதிர்பார்ப்பதுதான் காரணம் என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி புகார் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘கமிஷன் எதிர்பார்ப்பது என்றால் பில் கலெக்டர்கள் எதிர்பார்க்கலாம். பல அதிகாரிகள் எதிர்பார்க்கலாம். பொத்தாம் பொதுவாக சீனிவாசன் கமிஷன் எதிர்பார்த்து பாலம் வேலை முடியாமல் இருக்கிறது என்று பேசி வருகின்றனர். இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ettapadi ,Palaniasamy ,reign ,Jayalalitha , Edapadi Palanisamy regime, Jayalalitha regime, Mettur dam
× RELATED சென்னை மதுரவாயல்-துறைமுகம் பறக்கும்...