×

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஜராவதில் தாமதம்?

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் நான்காவது முறையாக விசாரணையை தள்ளி வைக்கப்பட்டு இருப்பது ஆணைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக கடந்த டிசம்பர் 19ம் தேதியும், ஜனவரி 9ம் தேதி, ஜனவரி 23ம் தேதி ஆணையம் சார்பில், ஆஜராக மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இந்த நிலையில், ஜனவரி 29ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.இந்த நிலையில், கடந்த 25ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தை தரவேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தை தரக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்தார். இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அந்த மனுவை திரும்ப பெற்று கொண்டார். இந்த நிலையில், மேலும், ஓபிஎஸ் உடன் விசாரணை முடிப்பது தொடர்பாக ஆணைய வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்க கோரிய மனு உட்பட 3 மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். மேலும், பிப்ரவரி 5ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (இன்று) ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 25ம் தேதி ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவில் பல சாட்சிகளின் வாக்குமூலம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஓபிஎஸ் வழக்கறிஞர் திரும்ப பெற்றுக்கொண்டார். அப்போலோ மருத்துவமனை மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. ஆனால் நீதிபதி, விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் மருத்துவக்குழு அமைக்க தேவையில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து, அப்போலோ நிர்வாகம் சார்பில் அப்பீல் செய்ய இருக்கிறார்களா, அப்படி அப்பீல் சென்றால் ஓபிஎஸ் விசாரிப்பது இடைஞ்சலாக இருக்கும் என்று ஆணையம் கருத்து கூறியது.

எங்கள் தரப்பில் ஓபிஎஸ்சிற்கும், மருத்துவக்குழுவிற்கும் சம்பந்தமில்லை. ஓபிஎஸ்சை விசாரிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தான் அவசியம். அவர் பொதுவெளியிலும் பொதுமக்கள் மத்தியில் வைத்த குற்றச்சாட்டால் சசிகலா தான் பாதிக்கப்படைந்துள்ளார். அதனால், தான் ஆணையம் தரப்பில் எங்களை அழைத்துள்ளீர்கள் என்று கேட்டோம். ஆனால், ஆணையம் சார்பில் ஓபிஎஸ்சை இப்போது விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, 5ம் தேதி வரை விசாரணையை தள்ளி வைக்கப்படுகிறது என்று நீதிபதி கூறினார். எனவே, ஓபிஎஸ் பிப்ரவரி 5ம் தேதி ஆஜராகிறார்.ஓபிஎஸ் உடன் ஆணைய விசாரணையை முடித்து கொள்ளலாம் என்று ஆணைய தரப்பு  கூறியது. இதற்கு, நாங்கள் ஆட்சேபனை தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தோம். பலரை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர் தொண்டர்கள் மத்தியில் பேசி வருகின்றனர். எனவே குறைந்தது 9 அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வலியுறுத்தப்படும். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்க வேண்டும். எங்களுக்கு ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் விசாரணையை முடித்துவிடுவோம். தற்போது ஆணையத்தின் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) பன்னீர்செல்வம் ஆஜராகி இருந்தால் சசிகலா குற்றமற்றவர் என நிரூபித்து இருப்போம். அவர் எப்போது ஆஜரானாலும் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபனம் ஆகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : J. ,arrival ,Vice Chief of OBC ,death inquiry commission , Jayalalithaa's death, Deputy Chief Minister OBS, Investigation Commission
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...