×

நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் தொடரை வென்று இந்தியா அசத்தல்: 3-0 என முன்னிலை பெற்றது

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என அசைக்கமுடியாத முன்னிலையுடன் தொடரையும் கைப்பற்றியது. பே ஓவல்  மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியில் கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு சான்ட்னர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர் டோனி காயம்  காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நியூசி. தொடக்க வீரர்களாக கப்தில், மன்றோ களமிறங்கினர். மன்றோ 7 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். கப்தில் 13 ரன்னில் வெளியேற, கேப்டன் வில்லியம்சன் 28 ரன் எடுத்து சாஹல் சுழலில் ஹர்திக்  அமர்க்களமாக கேட்ச் பிடிக்க பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து 59 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன்  சேர்த்தது.இருவரும் அரை சதம் அடித்தனர். லாதம் 51 ரன் (64 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் ராயுடு வசம் பிடிபட்டார். டெய்லர் - லாதம் இணை 119 ரன் சேர்த்தது. அடுத்து வந்த நிகோல்ஸ் 6 ரன்,  சான்ட்னர் 3 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெய்லர் 93 ரன் (106 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் கார்த்திக் வசம்  கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சோதி 12, பிரேஸ்வெல் 15 ரன் எடுக்க, போல்ட் 2 ரன் எடுத்து புவனேஷ்வர் பந்துவீச்சில் ஷமி வசம் பிடிபட்டார். நியூசிலாந்து 49 ஓவரில் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி 65 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை  பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஷமி 3, ஹர்திக், சாஹல், புவனேஷ்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.  ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 28 ரன் (27 பந்து, 6 பவுண்டரி) விளாசி போல்ட் வேகத்தில் டெய்லர் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இருவரும் அரை சதம்  அடித்ததுடன், 2வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தனர். ரோகித் 62 ரன் (77 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கோஹ்லி 60 ரன் (74 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

ராயுடு - கார்த்திக் ஜோடி உறுதியுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா 43 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ராயுடு 40 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கார்த்திக் 38  ரன்னுடன் (38 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 4வது ஒருநாள் போட்டி  ஹாமில்டனில் 31ம் தேதி நடக்கிறது. 4வது, 5வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவர் நாடு திரும்புகிறார்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,New Zealand , New Zealand, hat trick series, India, lead
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!