×

நாங்குநேரி பெருமாள் கோயிலில் வடமாநில பக்தர்கள் வருகை அதிகரிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி பெருமாள் கோயிலுக்கு வடமாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. 108 வைணவ தலங்களுள் ஒன்றாகத் திகழும் நாங்குநேரி பெருமாள் கோயில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது. ‘தோத்தாத்ரி நாத்’ என வட மாநிலத்தவரால் அழைக்கப்படும் நாங்குநேரி வானமாமலைப் பெருமாளைத் தரிசிக்க ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், உத்தர்பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம், உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலிருந்து கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு சுற்றுலா வரும் வட மாநிலத்தவரும் நாங்குநேரிக்கு வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். அந்தந்த மாநில பஸ்களில் கூட்டடமாக வரும் பக்தர்கள், நாங்குநேரி பெருமாள் கோயில் வளாகத்தில் தங்குவதோடு அருகேயுள்ள பெரியகுளத்தில் துணிகளை துவைத்து நீராடிய பிறகு கோயிலுக்குச் சென்று பெருமாளையும், திருவரமங்கைத் தாயாரையும் வணங்குகின்றனர். பின்னர், தாங்கள் ஏற்கனவே எடுத்துவந்த காஸ், மண்ணெண்ணெய் அடுப்புகளை பற்றவைத்து தாங்கள் கொண்டுவந்த பொருட்களுடன் தேவையான பிற பொருட்களை நாங்குநேரியிலுள்ள கடைகளில் வாங்கி வந்து அங்கேயே சமைத்து சாப்பிடுகின்றனர்.

தங்களுக்குப் பிடித்த சுவையான சப்பாத்தி, ரொட்டி, பூரி மற்றும் அரிசி சாதம். பருப்பு என அனைத்துவிதமான உணவுகளையும் அங்கேயே சமைத்து அனைவரும் கூடி அமர்ந்து உணவருந்தியபிறகு அங்கேயே ஓய்வெடுத்து விட்டு பின் தங்கள் பயணத் திட்டத்தை தொடர்கின்றனர். தற்போது வட மாநிலத்தில் நிலவும் கடுங்குளிரை சமாளிப்பதற்காக இதமான கால நிலை நிலவும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கு சுற்றுலா வந்து சுகமான வாழ்வை அனுபவிப்பதாக வடமாநில சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். வட மாநில சுற்றுலா பயணிகள் வருகையாலும் அவர்கள் பேசும் வட மொழி பேச்சாலும் நாங்குநேரி பெருமாள் கோயில் வளாகம் கலகலப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NANGANERI PUTHAMAL THIRUVANANTHAPURAM , Nanguneri, Perumal Temple, devotees
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...